வழிபட்டுக் காட்டுகிறார் : ஐம்புலன்களும் ஒன்றி வழிபடுவதே வழிபாடு. "ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை" என்பார் அப்பர். இதனைச் சுந்தரர் தம் வாழ்வில் நடந்து காட்டினார். மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்தும் அறிவுப்பொறிகள். அஃதாவது அறிவுதோன்றும் கருவிகள், சுந்தரரின் கண்கள் கூத்தப்பிரானைக் காண்கின்றன. மெய், வாய், மூக்கு, செவி என்னும் நான்கும் செயல்படாமல் கண்ணுக்குத் துணை நின்றன. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு அந்தக் கரணங்களுள் சித்தம் மட்டும் கண்ணால் கண்ட பொருளைச் சிந்தித்துக் கொண்டிருந்தது. மற்ற மனம், புத்தி, அகங்காரம் என்ற மூன்று கரணங்களும் செயல்படாமல் சித்தத்திற்குத் துணை செய்தன. சத்துவகுணம் ரஜோகுணம் தமோகுணம் என்ற மூன்றில் சத்துவகுணம் செயல்பட்டது. ரஜோகுணமும் தமோகுணமும் செயல்படாது சத்துவ குணத்திற்கு இடர்செய்யாதிருந்தன. கண்பெருமானைக் காண்கின்றது. கண்ட பேரின்பப்பொருளைச் சித்தம் சிந்திக்கிறது. இவற்றிற்கு அடிப்படையாகச் சத்துவ குணம் மேலோங்கி நின்றது. எனவே நடராசப் பெருமானை ஒருமையுணர்வுடன் வழிபட்டு மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார். இது சேக்கிழார் காட்டும் சித்திரம். பெருமானைச் சுந்தரர் அனுபவித்த பேரின்ப வழிபாட்டுநிலை இது. அப்பாடல் காண்க. ஐந்துபேரறிவும் கண்களே கொள்ள | அளப்பருங் கரணங்கள் நான்கும் | சிந்தையே யாகக் குணம் ஒரு மூன்றும் | திருந்துசாத் துவிகமே யாக | இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த | எல்லையில் தனிப்பெருங் கூத்தின் | வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து | மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார். | -தி. 12 தடுத். 106 |
இப்பாடலுக்கு அனுபவப்பயன் வருமோ என்று தருமை ஆதீனம் நான்காவது குருமூர்த்திகளாகிய ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக சுவாமிகள் குமரகுருபரரை வினவியபோது, "இருந்ததனை இருந்தபடி இருந்து காட்ட வேண்டிய நிலை அல்லவா அனுபூதிநிலை" என்பதைக் குமரகுருபரர் உணர்ந்து, அப்பயிற்சியின்மையால், பதில் கூறமுடியாது, வாக்குத் தடைப்பட, இவரே நம் குருநாதர் என்று திருவடிகளில் வீழ்ந்து, வணங்கிச் சீடனாக ஏற்றுக்கொள்ளுமாறு விண்ணப்பித்தார். அவ்விண்ணப்பமே, பண்டார மும்மணிக்கோவை
|