பக்கம் எண் :

12
 

என்ற சித்தாந்தத் தெளிவியல்நூல்.

சுந்தரர் தில்லையில் பதிகம் பாடினார் என்கிறார் சேக்கிழார். அப்பதிகம் கிடைத்திலது. இங்குத்தான் "ஆரூரில் நம்பால்வருக" என அசரீரியாக அம்பலக்கூத்தன் அருள்புரிந்தார். அம்மொழிவழியே ஆரூர் சேர்ந்தார் சுந்தரர்.

அவதார நோக்கம் நிறைவேறிய தலம் :

சுந்தரர் அவதார நோக்கம் நிறைவேறிய தலம் திருவாரூராகும். தியாககேசப் பெருமான் திருவாரூரில் வாழ்வார்க்கு "ஆராத காதலின் நம் ஆரூரன் நாம் அழைக்க வருகின்றான், அவனை மகிழ்ந்து எதிர்கொள்வீர்" என்று அருளினார். அவ்வருளாணையை ஏற்ற அடியவர்கள் திருவாரூர் எல்லைப் புறத்திருந்து ஆரூரரை எதிர் கொண்டு அழைத்துச் சென்றனர். அப்போது தன் எளிமையையும் பெருமானது அருமையையும் உணர்ந்து ஆரூரர்,

".............. வானவர் தானவர்க் கெல்லாம்...........
அரையன் இருப்பதும் ஆரூர்
அவர் எம்மையும் ஆள்வரோ! கேளீர்"

என்று அச்சத்துடன் வினவுவதுபோல அமைந்துள்ள "கரையும் கடலும் மலையும்" என்னும் பெருமைசால் பதிகம் (தி. 7 ப. 73) பாடினார். ஞானசம்பந்தரும் "எந்தைதான் எனை ஏன்றுகொளும்கொலோ" (தி. 3 ப. 45) என்று அஞ்சியமையும், அப்பரும், "தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் நமக்கும் உண்டுகொலோ" (தி. 4 ப. 101) என்று அஞ்சியமையும் இதனுடன் ஒப்புநோக்கி உணரத்தக்கன.

திருத்தொண்டத் தொகை :

திருவாரூரில் முதலில் பெருமான் தம்மைச் சுந்தரருக்குத் தோழனாகக் கொடுத்தார். தோழனாகக் கொடுத்ததற்கு ஏற்பப் பரவையாரைத் திருமணம் செய்து வைத்தார். திருமண மையலிலேயே போகவிடாமல் விறன்மிண்டர் வாயிலாக அடியவர்கட்கெல்லாம் அடியேன் என்று பாடும் திருத்தொண்டத் தொகையைப் பாடுமாறு செய்வித்தார். சுந்தரர் அதில் "ஆருரில் அம்மானுக்கு ஆளாகிய ஆரூரன் அடியவர்கட்கெல்லாம் அடியேன்" என்று பாடி அருளினார். "ஆண்டவன் பெருமையை அறியாததுபோலவே அடியார் பெருமையையும் அறியாத எளியேன் என்சொல்லிப் பாடுவேன்" என்றபோது, தியாகேசப் பெருமானே "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று