அடியெடுத்துக் கொடுத்தருளினார். திருவாரூரில் இறைவன் தன்னைச் சுந்தரருக்குத் தோழனாகக் கொடுத்ததும் பரவையாரைத் திருமணம் செய்து வைத்ததும், திருத்தொண்டத்தொகை பாடி வழிபடச் செய்ததும் சுந்தரர் வரலாற்றில் அவதார நோக்கம் நிறைவெய்திய பகுதியாகும். பதினேழு பண்கள் : ஏழாம் திருமுறையில் பதினேழு பண்களும், நூறு திருப்பதிகங்களும், தொண்ணூற்றாறு திருத்தலங்களும் இடம் பெற்றுள்ளன. பதினேழு பண்களில் செந்துருத்திப்பண் இவர் மட்டுமே பாடியுள்ளதாகும். மற்றைய பதினாறும் ஞானசம்பந்தரும் பாடியுள்ளார். இவர் பாடியுள்ள பதினேழு பண்களாவன இந்தளம், தக்கராகம், நட்டராகம், கொல்லி, கொல்லிக்கௌவாணம், பழம்பஞ்சுரம், தக்கேசி, காந்தாரம், பியந்தைக்காந்தாரம், பஞ்சமம், காந்தார பஞ்சமம், நட்டபாடை, புறநீர்மை, சீகாமரம், குறிஞ்சி, கௌசிகம், செந்துருத்தி ஆகியனவாம். இவற்றுள்ளும் சில பண்கள் கட்டளைப் பேதங்களோடு உள்ளன. கூடுமாறு தன்னைக் கொடுப்பான் : சுந்தரர் திருநீடூர்த் திருப்பதிகத்துள் இறைவன் தகுதியுள்ள உயிர்களுக்குத் தன்னைக் கொடுப்பான். அஃதாவது உயிர்களிடத்து எழுந்தருளுவான் என்பதை விளக்குகிறார். ஒரு குற்றமும் இல்லாத தூய சிந்தைகொண்ட உயிர்களுக்குத் தன்னையே கொடுப்பான். மேலும், கற்ற கல்வியினும் இனியவன் என்றும், விரும்பும் அடியார்க்கு எளியவன் என்றும், ஐம்புல இன்பங்களை முற்றும் துறந்தவன் என்றும், மூவரின் முதலாயவன் என்றும் பெருமானின் தன்மைகளை விளக்குகின்றார். அப்பாடல் வருமாறு. குற்றம் ஒன்று அடியார் இலர் ஆனால் | கூடுமாறு தனைக் கொடுப்பானை | கற்ற கல்வியிலும் இனியானைக் | காணப் பேணுமவர்க்கு எளியானை | முற்ற அஞ்சும் துறந்திருப்பானை | மூவரின் முதலாயவன் தன்னைச் | சுற்றும் நீர் வயல் சூழ் திருநீடூர்த் | தோன்றலைப் பணியாவிடலாமே. | (தி. 7 ப. 56 பா. 5) |
இப்பாடலில் கூடுமாறு தனைக் கொடுப்பானை என்றில்லாமல், கூடுமாறதனைக் கொடுப்பானை என்றே பதிப்பித்துள்ளனர். அதில் சிறப்பு இல்லை.
|