நிலையாமை உணர்த்துகிறார் : காஞ்சீபுரத்தில் இடக்கண் பெற்ற சுந்தரர் அங்கிருந்து தெற்கே நெடுந்தொலைவில் உள்ள திருநெல்வாயில் அரத்துறைப் பதியை அடைந்து அவ்வூர்ப் பெருமானிடம் "அடியேன் உய்யப் போவதோர் சூழல் சொல்லே" என்று இறைஞ்சுகின்றார். "ஓடு புனல் கரையாம் இளமை, உறங்கி விழித்தால் ஒக்கும் இப்பிறவி" என்கின்றார். நீர் ஓடும் ஆற்றின் கரையை யாக்கை நிலையாமைக்கு உவமை காட்டி உணர்த்துகிறார். இப்பதிகம் முழுவதும் பல கோணங்களில் நிலையாமையை வலியுறுத்துவது காணலாம். சிந்திப்பார்க்கு நெல்லிக்கனி : கடைசியாக, திருவஞ்சைக்களத்தில் பாடியருளிய "தலைக்குத் தலைமாலை" (தி. 7 ப. 4) என்னும் பதிகத்தில் பெருமான் அருள் திறம் உணர்ந்து சிந்தித்திருப்பார்க்கு நெல்லிக்கனியாய் இனிப்பான் என்றும் பெருமானை நினைத்து உள்ளத்தில் கைவரப்பெற்றால் சிறியாரும் பெரியாராவார் என்றும் கூறுகிறார். இவற்றைச் "சிந்தித்து எழுவார்க்கு நெல்லிக்கனியே, சிறியார், பெரியார் மனந்தேறலுற்றால்" எனப் புலப்படுத்துகிறார். அதே பதிகம் (தி. 7 ப. 4) 4ஆம் பாடலில், எழுதும் மெய்யெழுத்திற்கு உயிராயிருக்கிறான் என்பார். "இல்லானே உள்ளானே" என்று மணிவாசகர் கூறியதுபோல் (தி. 8 ப. 1) இவரும் "இலையே ஒத்தியால் உளையே ஒத்தியால்" என்கிறார். குழைக்கும் பயிர்க்கெலாம் புயலாக மழை பொழிகின்றாய் அடியார்க்கு அணியனாயிருத்தலின் ஒருகுடிப் பிறப்பினன் போல்கின்றாய் என்கின்றார். அப்பாடல் பகுதி காண்க. "இழைக்கும் எழுத்துக்குயிரே ஒத்தியால் | இலையே ஒத்தியால் உளையே ஒத்தியால் | குழைக்கும் பயிர்க்கோர் புயலே ஒத்தியால் | அடியார் தமக்கோர் குடியே ஒத்தியால்" | (தி. 7 ப. 4 பா. 4) |
இப்பதிகத்தின் இறுதியில் "வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன்" என்று நிறைவு செய்து கயிலைக்குப் புறப்படுகின்றார். ஊரிடும் பிச்சை கொள்வதென்னே : இறை உணர்வு இல்லாதாரது நிறை (கற்பு) நிலைபெறாது என்பதை விளக்குவதற்கே பெருமான் பிட்சாடனராகத்
|