தாருகாவனத்து ரிஷி பத்தினிகள் முன் வந்தார். இதுவே பிட்சாடனராக வந்ததன் உண்மை வரலாறு. இதனையே வஞ்சப் புகழ்ச்சியாக ஓணகாந்தன் தளியில் குறிக்கின்றார். "காமாட்சியம்மை காமக்கோட்டத்தில் 32 தர்மங்களையும் செய்திருக்க அவர் கணவராகிய நீரோ பிச்சை எடுப்பது எதற்கு" என்று வினவுகின்றார். அப்பாடல் பகுதி காண்க. "காரிரும் பொழில் கச்சி மூதூர்க் | காமக்கோட்டம் உண்டாக நீர் போய் | ஊரிடும் பிச்சை கொள்வதென்னே | ஓணகாந்தன் தளியுளீரே." | (தி. 7 ப. 5 பா. 6) | இதே சுந்தரர் திருமுதுகுன்றத்திறைவனைப் பாடும்போது இதே கருத்தை வேறு ஒரு வகையில் குறிப்பிடுதல் காண்க. "செட்டிநின் காதலி ஊர்கள் தோறும் அறம் செய்ய அட்டுமின் சில்பலிக்கென்று அகங்கடை நிற்பதே."
(தி. 7 ப. 43 பா. 9) தோற்றம் உண்டேல் மரணம் உண்டு : திருக்கொள்ளிடத்தின் வடகரையிலுள்ள திருக்கானாட்டு முள்ளூரைத் தொழுது காவிரியின் வடகரையில் குத்தாலத்தின் அருகில் உள்ள திருஎதிர்கொள்பாடி சேர்கிறார். நிலையாமை உணர்வுதலைப்பட்டவராய் "மத்த யானை" என்னும் பதிகம் பாடினார். அதில் "மத்த யானை ஏறி மன்னர்சூழ வருவீர்காள், செத்தபோதில் யாரும் இல்லை, சிந்தையுள் வைம்மின்கள்" என்கின்றார் (தி. 7 ப. 7 பா. 1) பிறந்தவர் இறப்பது உறுதி. இதனைத் "தோற்றமுண்டேல் மரணம் உண்டு துயரமனைவாழ்க்கை" (தி. 7 ப. 7 பா. 2) என்று குறித்துள்ளார். மூவராயும் இருவராயும் : சுத்த மாயை அசுத்த மாயை மிச்சிரமாயை என மாயை மூவகைப்படும். சுத்தமாயையைத் தொழில் படுத்தும்போது சிவபிரான் தானே அயன் அரி அரன் என மூன்று நிலைகளையும் உடையவனாய் நிற்பன். இது சம்பு பட்சம் எனப்படும். அசுத்த மாயையின் கீழ் உள்ள பிரகிருதி மாயையைத் தொழில் படுத்தும்போது அணுபட்சத்தில் உள்ள அஃதாவது உயிர்வர்க்கத்தில் பக்குவப்பட்டு உயர்ந்துள்ள உயிர்களாகிய அயன் அரி அரன் என்பவர்கள் சிவபிரான் ஆணைவழி முத்தொழில் செய்வர். அம்மூவருள் உருத்திரன் ஏனைய இருவர்போலச் சிவபெருமானை மறந்து தாமே முதல்வர் எனக் கருதியவரல்லர். ஆதலால் இங்கு மூவராயும், இருவராயும் என உருத்திரனை உட்படுத்தியும்
|