பக்கம் எண் :

16
 

விலக்கியும் ஓதியருளினார். அப்பாடல்பகுதி காண்க.

"மூவராயும் இருவராயும் முதல்வன் அவனேயாம்
தேவர் கோயில் எதிர்கொள்பாடி என்ப தடைவோமே"

(தி. 7 ப. 7 பா. 4)

இறைகளோடு இசைந்த இன்பம் :

இறை என்ற சொல் சிறுமை என்ற பொருளிலும் செறிவு என்ற பொருளிலும் இறுத்தல், தங்குதல் என்ற பொருளிலும் வரும். இங்கு சிறுமை என்ற சொல்லைத் தாழ்ந்தது என்ற பொருளில் கையாள்கிறார். உலகியல் இன்பங்கள் எல்லாமே தாழ்ந்தவைகள். உயிர் தூய்மைபெறத் தாழ்ந்த பொருளோடு கலந்து தூய்மை பெற்ற பிறகு உயர்கிறது. இந்நிலையை உலகியலில் காண்கிறார் சுந்தரர். இவருக்கு இந்நிலை அருவருப்பைத் தருகிறது. எனவே ஆரூர் அப்பனிடம் இந்நிலைகண்டு அஞ்சுவதாக விண்ணப்பம் செய்கிறார். கிழிந்த பறையைப்போன்ற உடற் போர்வையினின்றும் பார்த்ததாகவும் அறிவிக்கின்றார். கிழிந்த பறையை நிலையாமைக்கு எடுத்துக்காட்டாக அறிவிக்கிறார். இல்வாழ்வு மனத்தை நெருடுவது குறிக்கப்பெறுகிறது. அப்பாடல் வருமாறு :

இறைகளோடு இசைந்த இன்பம் இன்பத்தோடி சைந்த வாழ்வு
பறைகிழித்தனைய போர்வை பற்றியான் நோக்கினேற்கு
திறைகொணர்ந்தீண்டி தேவர் செம்பொனும் மணியும் தூவி
அறைகழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே.

(தி. 7 ப. 8 பா. 1)

புகழ்த்துணைக்குப் பொன் கொடுத்தார் :

திருவாஞ்சியமும், திருநறையூர்ச் சித்தீச்சரமும் பணிந்து திரு அரிசிற்கரைப்புத்தூர் சார்கிறார் சுந்தரர். புகழ்த்துணை நாயனார் சிவாசாரியராய்ப் புத்தூர்ப் பெருமானை நாளும் போற்றி வழிபாடு செய்து வந்தார். வறுமையால் உடல் தளர்ந்து அபிஷேகக் கலசத்தைப் பெருமான் முடிமீது வீழ்த்திவிட்டு நடுங்கினார். பெருமானோ அவரது பத்திமைப் பண்பை உலகிற்கு அறிவிக்கும் பொருட்டு நித்தம் புகழ்த்துணையார்க்குப் படிக்காசு வழங்கி வாழ்வளித்தார். இவ்வரலாற்றைச் சுந்தரர் "மலைக்கும் மகள் அஞ்ச" என்று தொடங்கும் பதிகத்தில் (தி. 7 ப. 9 பா. 1) ஆறாம் பாடலில் குறிப்பிட்டு மகிழ்கிறார். அப்பாடல்,

அகத்தடிமை செய்யும் அந்தணன்தான்

அரிசில்புனல் கொண்டுவந்தாட்டுகின்றான்

மிகத்தளர்வெய்திக் குடத்தையும் நும்

முடிமேல் விழுத்திட்டு நடுங்குதலும்