44. ‘வீசும் வாசல்’ என இயையும். வாசல், ‘வாயில்’ என்பதன் மரூஉ. தெண்ணர், ‘திண்ணர்’ என்பதன் மரூஉ’ ‘மூர்க்கர்’ எனப் பொருள் தந்தது. ‘‘தெண்ணர் கற்பழிக் கத்திரு உள்ளமே’’ (திருமுறை-3, 47, 3) என வந்தமை காண்க. ‘உள்ளத்து இருளர்’ என்க. ‘திட்டை, முட்டை’ என்பன: பகுப்பற்ற பிண்டத்தை உணர்த்தி நின்றன. ‘‘பெண்ணர்’’ என்பதற்கு, ‘‘பேடர்’’ என்றதற்கு உரைத்தது உரைக்க. 45. சிறப்பு-யாவரினும் உயர்ந்து நிற்கும் மேன்மை. உறைப்பு-உறுதி. ‘சிறப்புடை அடியாராகிய; உறைப்புடை அடியார்’ எனவும்,‘உறைப்புடை அடியார்க்குக் கீழ்க்கீழாய் உறைத்தலாவது சேவடி’ எனவும் உரைக்க. கீழ்க்கீழாய் உறைப்பவரது, அடியார்க்கு அடியராயும், அவர்க்கு அடியராயும் நிற்றலில் உறுதியுடையராதல், ‘‘நீறு’’ என்றது, புழுதியை. பிறப்பர்-பிறப்பவர். |