அம்மன் கோயிலைப்பற்றிய செய்தி: திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மைகொண்டான் இக்கோயிலில் உலகுமுழுதுடைய நாச்சியாரை எழுந்தருளுவித்து அவர்க்கு அமுதுபடி உள்ளிட்டு வேண்டுவனவற்றிற்கு அருமொழித்தேவ வளநாட்டு மேல்கூறு விடையபுரப்பற்றில் கொட்ட கர்க்குடியிலே பதின் வேலி நிலத்தை இறையிலியாகக் கொடுக்கப் பெற்ற செய்தியை அம்மன் கோயில் கல்வெட்டு அறிவிக்கின்றது. இங்குக் குறிக்கப்பெற்ற திரிபுவனச் சக்கரவர்த்தி சோழ மன்னனோ அல்லது பாண்டிய மன்னனோ என்று துணிந்து கூற முடியவில்லை. ஏனெனில் இருவம்சத்தார்களும் திரிபுவனச் சக்கரவர்த்தி கோநேரின்மைகொண்டான் என்ற பட்டங்களைச் சூடி வந்தார்கள். கோநேரின்மை கொண்டான் என்பது தனக்கு ஒப்பார் எவரும் இலர் என்ற பொருள் தரும். எனவே அம்மனின் திருப்பெயர் உலகமுழுதுடைய நாச்சியார் என்பதாகும் அம்மன்கோயிலுக்கு முன்னிலையில் உள்ள மண்டபங்களுக்கு மல்லப்ப நாயக்கர் மண்டபம், மூர்த்தி அம்மன் மண்டபம் என்னும் பெயர்கள் வைக்கப்பெற்றிருந்தன. இவைகளை எல்லாம் அம்மன்கோயிலின் மேற்குப்புறச் சுவரிலுள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. கணேசர்: நிர்த்தனம் செய்யும் கணபதியார் இருவர், உட்கார்ந்து இருக்கும் கணபதியார் மூவர், நிற்கும் நிலையிலிருக்கும் கணபதியார் ஒருவர் ஆக எழுவர் திருமேனிகளை, முதலாம் இராசராசன் இக்கோயிலில் எழுந்தருளுவித்துள்ளான் இவர்களையன்றி ஆலயத்துப்பிள்ளையார், பரிவார ஆலயத்துப்பிள்ளையார் இவர்களைப் பற்றியும் குறிப்புக்கள் இருக்கின்றன. பிராகாரத்தில் இருக்கும் பிள்ளையார்கோயிலை, தஞ்சையை ஆண்ட மகாராட்டிரமன்னராகிய சரபோஜி மகாராசர் சகம் 1723இல் பழுதுபார்த்ததோடு இக்கோயிலுக்கு அர்த்தமண்டபம், மகாமண்டபம் இவைகளையும் புதிதாகக் கட்டியுள்ளார். சகம் 1723 என்பது கி. பி. 1801 ஆகும். எனவே இம்மண்டபங்கள் கட்டப்பெற்று இற்றைக்கு 168 ஆண்டுகள் ஆகின்றன. இச்செய்திகளை இக்கணபதிக் கோயிலில் உள்ள படிக்கட்டுகளின் கல் வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. சுப்பிரமணியர் கோயில்: மேற்குறித்த சரபோஜி மகாராசர் சகம் 1723 அதாவது கி.பி. 1801, இக்கோயில் மகாமண்டபத்தின் முன்புள்ள படிக்கட்டுகளைப் புதிதாகக் கட்டியுள்ளனர். |