66. மான் - மான்போன்றவளாகிய என்மகளது. ஏர் கலை - அழகிய உடை. வழக்கு உண்டே - நீதி உண்டோ. ஆனே அலம்பு - ஆக்களே, ஒலிக்கின்ற; ஆவடுதுறை என்க. ‘‘ஆனே’’ என்றதனை இறைவனுக்கு ஏற்றி உரைப்பாரும், ‘அவ்விடத்தே’ என உரைப்பாரும் உளர். ‘ஆவடு துறைக் குன்றமே’ என இயைக்க. இப்பாட்டு முழுதும் செவிலி கூற்று. 67. குன்றேந்தி - கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தியவன்; திருமால். கோகனகத்து அயன் - தாமரை மலரில் இருக்கும் பிரமன். இவ்விருவரும் அறியா நெறி, சிவஞான நெறி. எல்லை - உலக முறைமை. ‘பொன்னியை ஆவடுதுறைக்கண் ஆடினாள்’ என்க. ‘ஆடினாள் ; அன்றே இவள் நம்பரம் அல்லள்; நன்றே நவலோக நாயகன் பாலளே’ எனக் கூட்டுக. பரம் - சார்பு. நவம் - புதுமை; இங்கு வியப்பைக் குறித்தது. |