81. ‘இப் பௌவநீர்’ என இயைத்து, ‘நீந்துதற்கரிய பிறவியாகிய கடல்நீரை நீந்துகின்ற ஏழையேனுக்கு’ என உரைக்க. ஐவர் ஐம்பொறிகள். ‘உடன்பிறந்தோர் அனைவருமே பகையாய்விட்டமையின் எனக்கு யார் துணை’ என்றவாறு. கை வரும் பழனம்-பக்கங்களில் பொருந்தியுள்ள வயல்களில், குழைத்த-தளிர்த்த. செஞ்சாலி-செந்நெற் பயிர். ‘நீலப் பூக்களின் கொடிகளே களைகளாய் உள்ளன’ என்றபடி-செய் வரம்பு அரும்பு-வயல்களின் வரப்புக்களில் காணப்படுகின்ற. 82. ‘‘தாயின்’’ என்றதில் இன், சாரியை. இனி இதனை உருபாக்கி, ‘நேர் நின்று இரங்கும்’ என உரைத்தலும் ஆம். ‘‘தலைவ, துணைவ’’ என்ற விளிகட்குப் பின்னர் நின்ற ஓகாரங்கள் முறையீடு குறித்து நின்றன. வாயின் ஏர் அரும்பு-மகளிரது வாய்போல எழுச்சி விளங்குகின்ற. மணி முருக்கு-அழகிய முருக்க மலர். நேர் தீயின் அரும்பு-அதன் எதிராக நெருப்புப்போலத் தோன்றுகின்ற. |