94. பழையராந் தொண்டர்-நெடுங்காலமாகத் தொண்டு செய்துவருபவர். மிண்டர்-வன்கண்மை யுடையவர். ‘‘பிணி’’ என்றது வினையை, ‘எனது குற்றமான செயலைப் பொருட்படுத்தாது நீக்குதலும், அவ்வாற்றால் எனக்கு வினை உண்டாகாமல் தடுத்தலும் செய்யாதவர்’ என்றபடி. இதனால், இவ்வாசிரியர் தமது வினையால் தமக்கு உண்டாகிய துன்பத்தை உணர்ந்திருந்தமை பெறப்பட்டது. குழகர்-இளையவர். கங்கை அழகர்-கங்கையை அணிந்த அழகர். 95. ‘முடியும், வாயும், மேனியும் செந்நிற முடையன ; திருமேனிமேற் பூச்சும், முப்புரி நூலும், புன்னகையும் வெண்ணிறமுடையன’ என்றவாறு. தவளம்-வெண்மை. களபம்-பூசும் சாந்து ; சிவபெருமான் பூசிக்கொள்ளும் சாந்து திருநீறே. துவளும்-நெளியும். ‘‘கலை’’ எனப் பொதுப்படக் கூறியது ‘தோலாடை’ என்றற்கு. துகில்-நல்லாடை. ‘‘ஒருபால்’ என்றாராயினும், ‘ஓரொருபால்’ என்பது கருத்தென்க. ஒருத்தி-ஒப்பற்றவள். இடமருங்கில் துடிபோலும் இடையை உடைய ஒப்பற்றவளாகிய அவளும் இருப்பாள்’ என உரைக்க. |