அவனைக் காண்டல் கூடாமையின், ‘எம் பெருமான் துணைமலர்ச் சேவடி காண்பான் யாம் செய்த தொழில் என்’ என்றாள். ‘உணர்தலால்’ என்பது, ‘‘உணர்ந்து’’ எனத் திரிந்து நின்றது. சிவபிரானைப் பல பிறப்புக்களில் நினைந்ததன் பயனே ஒரு பிறப்பில் அவன்பால் விளையும் அன்பாகும் ஆதலின், ‘உளம் ஊழிதோறூழி உணர்ந்து கசிந்து உருகும்’ என்றாள். பின்னர் வந்த ‘‘உள்ளம்’’, சுட்டுப் பெயரளவாய் நின்றது. இங்குக் கம்பலை செய்வது கீழ்க்கோட்டூரே என்க. ‘‘வாழிய’’ என்றது அசைநிலை, 106. ‘‘தோழி’’ இரண்டனுள் முன்னது விளி ;பின்னது, ‘தோழியாகிய நீ’ என இருபெயரொட்டின்கண் வந்தது. ‘தோழி, இரவு நீ துணையாய் நிற்கப் போம் ; அதனால், மாலையம் பொழுதில் ஆழியும், திரையும் அலமருமாறு கண்டு அயர்வன் ; மணியம்பலவவோ என்று மயங்குவன் ; இதற்கு என் செய்கோம்’ எனக் கூட்டி யுரைக்க. முன்னர்த் தனது நிலையைக் கூறிப் பின், இருவரையும் சுட்டி, ‘என்செய்கோம்’ என்றாளாதலின், பால்வழுவின்மை அறிக. ‘இன்று இரவு தனிமையிற் கழிந்ததாயினும், நாளைக் காலை வந்து ‘அஞ்சேல்’ என்று அளிப்பான்’ என்று ஒவ்வோர் இரவிலும் கருதுகின்றவள். ஒரு நாளும் அவன் அங்ஙனம் வரக்காணாமையால், ‘‘பகல் வருமாகில் ‘‘அஞ்சலோ என்னான்’’ என்றாள். அஞ்சலோ என்னான் என்றது, ‘அஞ்சல் என்று சொல்வதோ செய்யான்’ எனப் பொருள் தந்து நின்றது. அன்றி, |