பக்கம் எண் :

திருமுறை]10. திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்73


110. 
 

அந்திபோல் உருவும் அந்தியிற் பிறைசேர்
   அழகிய சடையும் வெண்ணீறும்
சிந்தையால் நினையிற் சிந்தையுங் காணேன்;
   செய்வதென் ! தெளிபுனல் அலங்கற்
கெந்தியா உகளுங் கெண்டைபுண் டரீகங்
   கிழிக்குந்தண் பணைசெய்கீழ்க் கோட்டூர்
வந்தநாள் மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தனே அறியும்என் மனமே.               (10)
 

111. 

கித்திநின் றாடும் அரிவையர் தெருவிற்
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மத்தனை மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தனை ஆரணம் பிதற்றும்
பித்தனேன் மொழிந்த மணிநெடு மாலை
   பெரியவர்க் ககலிரு விசும்பின்
முத்தியா மென்றே உலகர்ஏத் துவரேல்
   முகமலர்ந் தெதிர்கொளுந் திருவே.             (11)
 

திருச்சிற்றம்பலம்


110.   அந்தியில் பிறை-மாலைக் காலத்தில் தோன்றுகின்ற சந்திரன்.
சிந்தையை    விட்டு    அவனிடத்தே    அடங்குதலால்,    சிந்தை
காணப்படாதாயிற்று.  ‘ஏனைய  கருவிகளையேயன்றி,  எனப் பொருள்
தருதலின்,  ‘‘சிந்தையும்’’ என்னும் உம்மை, இறந்தது தழுவிய  எச்சம்.
அலங்கல்-அசைவின்கண்.     கெந்தியா    (கந்தியா)-மணம்    வீசி,
புண்டரிகம்-.தாமரை  மலர்.‘‘கெந்தியா உகளும் கெண்டை புண்டரிகம்
கிழிக்கும்’’  என்றாராயினும்‘புண்டரிகம் கிழிக்கும் கெண்டை கெந்தியா
உகளும்’   என்பது   கருத்தென்க.   கெந்தித்தல்.   புண்டரிகத்தைக்
கிழித்தலால் உண்டாயிற்று. வந்த நாள்-சென்று நான் அவனைக் கண்ட
நாளில்  (வேபட்ட  என்  மனநிலையை  அவன் ஒருவனே அறிவான்
என்க.)

111. கித்தி-விளையாட்டு.‘அரிவையர் கம்பலை செய்’ என இயையும்.
மத்தன்-உன்மத்தன்   ;  ‘ஊமத்த  மலரைச்  சூடியவன்   எனலுமாம்.
பெரியவர்க்கு-பக்குவம்  மிக்கோர்க்கு.  ‘‘அகல் இரு விசும்பு’’ என்றது
சிவலோகத்தை,   ‘விசும்பின்   கண்ணதாகிய  முத்தி’  என்க. முத்தி
தருவதனை, ‘‘முத்தி’’  என்றார். ‘திருவும்’ என்னும் இறந்தது  தழுவிய
எச்ச  உம்மை  தொகுத்தலாயிற்று  திரு-திருமகள்.  அவள்,  துறக்கம்
முதலிய   செல்வத்தைத்   தருபவள்.  எனவே,  ‘இம்மை   மறுமைப்
பயன்களையும் பெறுவர்’ என்றதாம்.