அப்படைத் தலைவனும் வடவர்களை வென்று கங்கை நீரைக் கைக்கொண்டு திரும்புகையில், இராசேந்திரன் அப்படைத் தலைவனைக் கோதாவரி யாற்றங்கரையில் கண்டு பெருமகிழ்வுற்றுத் தன் நாட்டிற்குத் திரும்பினான். இதனால் இவனுக்குக் கங்கை கொண்ட சோழன் என்னும் பெயர் தோன்றலாயிற்று. கொணர்ந்த கங்கை நீரை, சோழகங்கம் என்னும் ஏரி ஒன்றை வெட்டி அதில் ஊற்றினான். அந்த ஏரி இக்காலம் பொன்னேரி என்ற பெயருடன் விளங்குகின்றது.புதிதாக நிர்மாணம் பண்ணின தலைநகரும் கங்கைகொண்ட சோழபுரம் என்னும் பெயர் பெற்றது. கங்கைமாநகர் என்று வீரராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தியிலும், கங்காபுரி என்று கலிங்கத்துப் பரணியிலும் இக்கங்கை கொண்ட சோழபுரம் குறிப்பிடப் பெற்றுள்ளது. இங்கே இவன் கட்டிய கோயிலும் கங்கைகொண்ட சோழேச்சரம் என்னும் பெயர் எய்திற்று. இச்சோழேச்சரம் உருவத்தில் தஞ்சை இராசராசேச்சரத்தை ஒத்தது. சிற்பத் திறன் வாய்ந்தது. இங்குள்ள சண்டேசுவர பிரசாத தேவரின் திருமேனி மிக்க வேலைப்பாடு உடையது. கண்கவரும் வனப்புடையது. இந்தக் கங்கை கொண்ட சோழேச்சரத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமான் மீது கருவூர்த்தேவர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இந்தக் கங்கைகொண்ட சோழபுரம் எத்தனையோ வெற்றி விழாக்கள் நடந்த இடம். சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், சேக்கிழார் முதலான புலவர் பெருமக்கள் வாழ்ந்த இடம். கலிங்கப்போரில் வெற்றிபெற்றுத் திரும்பிய முதற் குலோத்துங்க சோழன், தன் அவைக்களப்புலவராகிய சயங்கொண்டாரைப் பார்த்து, யானும் சயங்கொண்டான் ஆயினேன் எனக்கூற, சயங்கொண்டானை (வெற்றிபெற்றவனை)ச் சயங்கொண்டான் பாடுதல் பொருத்தமுடைத்து என்று கூறி, கலிங்கத்துப் பரணியைப் பாடிய இடம், விக்கிரமசோழனுலா, இரண்டாம் குலோத்துங்க சோழனுலா, இரண்டாம் இராசராசனுலா இவைகளெல்லாம் பாடப்பட்ட இடம். குலோத்துங்கன், சேக்கிழார் பெருமானைத் திருத்தொண்டர் புராணத்தைத் தில்லையில் பாடச்செய்து, நாள்தோறும் எவ்வளவு எவ்வளவு பாடல்கள் நிறைவேறின என ஆள் இட்டுக் கேட்டறிந்த இடம். கங்கைகொண்ட சோழன் முதல், மூன்றாம் இராசேந்திர சோழன் காலம்முடிய உள்ள சோழ மன்னர்களுக்குத் தலைநகராய்த் திகழ்ந்திருந்த இடம். இத்துணைச் சிறப்பினைப் பெற்றிருந்த இடம், இதுபொழுது ஒரு சிற்றூராகக் காட்சியளிக்கிறது எனினும் கங்கைகொண்ட சோழேச்சரம் என்னும் கோயிலே பண்டைப்பெருமை அனைத்தையும் |