பக்கம் எண் :

122கருவூர்த் தேவர் திருவிசைப்பா[ஒன்பதாந்


திருவருளைப்     பெறாதவரது     நிலைமைக்கும்,       பெற்றவரது
நிலைமைக்கும்    உள்ள    பெரியதொரு   வேற்றுமையை    இனிது
விளக்கியவாறு.    வருகின்ற    இருதிருப்பாட்டுக்களில்     கூறப்படும்
உவமைகளும்     இக்கருத்துப்பற்றியனவே     என்க.      திருவருள்
பெற்றார்க்கும்  அப்பிறப்பில்  நுகர  முகந்துகொண்ட   பிராரத்தவினை
நிற்றலின், அது காரணமாக மாதரார் கலவியில் ஆழ்தல்  உண்டாயினும்
அவர்   அதனால்  மயங்கி  அதனையே  மேலும்  மேலும்   அவாவி
அதற்கு  ஆவனவற்றின்கண்  விருப்புடையராய் அவற்றை   ஆக்கவும்,
அதற்கு    ஆகாதனவற்றின்கண்    வெறுப்புடையராய்     அவற்றை
அழிக்கவும்   முயலாது   இறைவனது   திருப்பணியிலே    முனைந்து
நிற்பராகலான்,  அவர்க்கு  மயக்கம்  இன்மை அறிக.  இதற்குச் சிறந்த
எடுத்துக்காட்டு,  நம்பியாரூரரது வரலாறேயாகும்.  அவர்,   ‘‘பிழைப்ப
னாகிலும்     திருவடிப்பிழையேன்’’
 (திருமுறை-7-54.1)     என்றது
இந்நிலையையேயாம்.   ‘‘கண்டுண்ட  சொல்லியர்  மெல்லியர்   காமக்
கலவிக்கள்ளை-மொண்டுண்   டயர்கினும்   வேல்மறவேன்’’   என்றார்
அருணகிரிநாதரும்.    (அலங்காரம்-37)    இன்னும்     மேற்காட்டிய
உவமையானே   இறைவன்   திருவருள்   கைகூடப்பெறாதவர்   கடிய
நோன்பு  முதலியவற்றால்  உடலை  வருத்தினாராயினும்,   அவர்க்கும்
மயக்கம்   நீங்குதல்  இல்லை  என்பதும்  பெறப்படும்.   சைவ  சமய
ஆசிரியன்மார்    சமண    பௌத்த   மதங்களின்    ஒழுக்கங்களை
இகழ்ந்தமை இதுபற்றியே என்பது உணர்க.

‘‘நாடுகளிற் புக்குழன்றும் காடுகளிற் சரித்தும்
   நாகமுழை புக்கிருந்துந் தாகமுதல் தவிர்ந்தும்
நீடுபல காலங்கள் நித்தராய் இருந்தும்
   நின்மலஞா னத்தையில்லார் நிகழ்ந்திடுவர் பிறப்பில்:
ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே இடைக்கே
   எறிவிழியின் படுகடைக்கே கிடந்தும்இறை ஞானம்
கூடும்அவர் கூடரிய வீடும் கூடிக்
   குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே யிருப்பர்’’
 
                              (சிவஞானசித்தி. சூ 10.5.)

என்னும்   சாத்திர முறையைக் காண்க. திருவருள்   வாய்க்கப் பெறாது
உலக  மயக்கிடை  ஆழ்ந்து கிடப்போர், தமது   நிலையைத் திருவருள்
பெற்றாரது  நிலையாகப்  பிறர்பாற்  கூறின், அது,   குற்றத்தின் மேலும்
உய்தியில்  குற்றமாய்  முடியும்  என்க.  மழலையாழ்    சிலம்ப-இனிய
யாழிசை ஒலிக்க. அகம்-உள்ளம்; ‘இல்லம்’ என்பது நயம்.