187. அல்லி-அகஇதழ். பழனம்-வயல். ஆமூர்-திருவாமூர். இது திருநாவுக்கரசர் திருவவதாரம் செய்த தலம். ‘‘நாவுக்கரசை’’ என்றதனை. ‘நாவுக்கரசுக்கு’ எனத் திரிக்க. ‘கொல்விடை’ என்பது ஐகாரம் பெற்று நின்றது. கொல்விடை போலும் விடை என்றபடி. கொல்விடை, விடலையர் தழுவுதற் பொருட்டு ஆயர் இனத்தில் வளர்க்கப்படுவன. விடை ஏறீ-இடபத்தை ஊர்பவனே. 188. ‘எம் வினைநோய்’ என இயையும், ‘பந்த வினை வல்வினை’ எனத் தனித்தனி இயைக்க. பந்தம்-கட்டு. திருப்பதிகங்களை வினைதீர்தற்கு வழியாகத் திருக்கடைக்காப்பு அருளிச்செய்து சென்றமையின், ‘‘எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்ட எமை ஆளும் சம்பந்தன்’’ என்றார். அம்பு உந்து-அம்புபோலப் பாய்கின்ற. ‘‘தானும்’’ எனப் படர்க்கையாகக் கூறினார். ‘‘தான்’’ என்றது, கூத்தப்பெருமானை. இடரின்றி உணர்த்தும் என்க. ‘கண்ணாளும் தானும் சேர்ந்து இருக்கை தில்லை அம்பலமே ஆயிற்று’ என மாறிக் கூட்டுக. ‘செம்பொன்னால்’ என உருபு விரிக்க. இருக்கை-இருக்கும் இடம். 189. ‘சேரமானொடு’ என உடனிகழ்ச்சிப் பொருளில் வரும் ஓடுவுருபு விரிக்க. ‘மதம் விளையா’ என மாற்றுக. விளையா-விளைந்து; பெருகி. மாறா-நீங்காத. மேற்கொள்ள-ஏறிச் செல்லும்படி. முளையாம் -இளைதாகிய. அளையா- |