திருச்சிற்றம்பலம்
கைகளை உச்சிமேற் சேர்த்தித் தொழுதலாம். துணை-திருவடித்துணை. ‘தோளாரவும், கையாரவும் துணையை ஆரத்தொழுதாலும்’ என்க. ஆள்-அடிமை. ‘‘ நீ’’ என்றதன்பின், ‘என்னை’ என்பது வருவித்து, ‘நீ என்னை உடையதுவும் ஆளோ’ என மாற்றி உரைக்க. ‘உடையதுவும் ஆளோ’ என்றது. ஆளாக உடையையோ’ என்றவாறு. ‘உடையை அல்லையாயின், அடியேன் உன் தாள்சேரும் நாளும் ஒன்று உண்டாகுமோ’ என்க. எனவே, ‘‘ஆளோ’’ என்ற ஓகாரம் ஐயப்பொருளிலும், ‘‘ஏதோ’’ என்னும் ஓகாரம் இரக்கப் பொருளிலும் வந்தனவாம். இனிப் பின்னின்ற ஓகாரத்தை அசைநிலையாகவும் ஆக்கி, ‘உடையாயின், ‘அடியேன் உன் தாள் சேரும் நாள் ஏது (யாது)’ என வினாப்பொருட்டாகவும் உரைக்க. 214. மூன்றாவது அடிமுதலாகத் தொடங்கி, ‘‘தடுப்பரிது’’ என்பதன்பின், ‘ஆதலின்’ என்னும் சொல்லெச்சம் வருவித்து உரைக்க. பா ஆர்ந்த-பாட்டாய்ப் பொருந்திய. ‘பா ஆர்ந்த மாலை’ எனவும், ‘மாலை எடுத்து அழைக்கின்றான்’ எனவும் இயையும். அருளின் இப்பொழுதே அருள்செய்தால்; என்றது, ‘காட்சி கொடுத்தருளினால்’ என்பதாம். ‘மிக நன்று’ என்க. ‘நாயடியேன் நினைக் காண்டலைச் சாவாயும் தடுப்பு உனக்கு இனி அரிது’ என மாறிக் கூட்டுக. ‘‘இனி’’ என்றது, ‘யான் ஓவாதே அழைப்பதான பின்பு’ என்றபடி. ‘இறைவன் தன்னைப் பன்னாள் அழைப்பவர்க்கு என்றாயினும் எதிர்ப்படுதல் கடன்’ (திருமுறை-4.112.9.). ஆதலாலும், இறக்கும் பொழுதும் எதிர்ப்படாதொழியின் கூற்றுவன் வந்து எதிர்ப்படுவானாகலின், அவன் வாராதவாறு அப்பொழுது ஒரு தலையாக எதிர்ப்படுதல் வேண்டுமாகலானும் இவ்வாறு கூறினார். இதனால், இறைவனது காட்சியைக் காண இவருக்கிருந்த வேட்கை மிகுதி புலனாகும். |