பக்கம் எண் :

திருமுறை]25. கோயில்165


சேண்பணை மாளிகைசூழ் தில்லை
   மாநகர்ச் சிற்றம்பலம்
மாண்புடை மாநடஞ்செய் மறை
   யோன்மலர்ப் பாதங்களே.                     (2)
 

249.

கள்ளவிழ் தாமரைமேற் கண்
   டயனொடு மால்பணிய
ஒள்ளெரி யின்னடுவே உரு
   வாய்ப்பரந் தோங்கியசீர்த்
தெள்ளிய தண்பொழில்சூழ் தில்லை
   மாநகர்ச் சிற்றம்பலத்
துள்ளெரி யாடுகின்ற ஒரு
   வனையு ணர்வரிதே !                         (3)

 


‘‘சேண்    பணை மாளிகை’’ என்றதை, ‘சேணிற்  பணைத்த மாளிகை’
எனப்   பிரிக்க.  ‘வானத்தை  அளாவிப்  பரந்த  மாளிகை’  என்பது
பொருள்.   ‘சிற்றம்பலத்துக்கண்’   என  உருபு  விரிக்க.  ‘நடம்செய்
பாதங்கள்’  என  இயையும். ‘‘பாதங்கள்’’ என்புழியும் தொகுக்கப்பட்ட
இரண்டனுருபை விரித்து, ‘யான் காண்பது என்று கொல்’ என்பதனைக்
கொண்டு   கூட்டி,  ‘இறைவனையும்,  அவன்  பாதங்களையும்  யான்
காண்பது  என்றோ’  என  உரைக்க.  பாதங்களை வேறாக  எடுத்துக்
கூறியது. அவற்றது சிறப்புப்பற்றி,‘‘நின்னிற் சிறந்த நின்தாள் இணை’’
(பரிபாடல்-4) எனச் சான்றோரும் கூறுவர்.

249. கள் அவிழ்-தேனோடு மலர்கின்ற. ‘தாமரைமேல் அயன்’ என
இயையும்.     ‘கண்ட’     என்பதன்     ஈறு    தொகுத்தலாயிற்று.
கண்ட-உலகத்தைப்   படைத்த.  ‘‘முழுவதுங்   கடைவனை’’ என்ற
திருவாசகத்தைக்   காண்க  (திருச்சதகம்.7.).   பணிய-செருக்கொழிந்து
வணங்குமாறு.    ‘நடுவே    எரியின்    உருவாய்’   என  மாற்றுக.
நடுவே-அவ்விருவர்க்கும்  நடுவிலே. ‘ஓங்கிய ஒருவன்’ எனவும். ‘சீர்த்
தில்லை,  தெள்ளிய  தில்லை, எனவும் இயையும். தெள்ளிய-மேலோர்,
தமக்குப்  புகலிடமாகத்  தெளிந்த.  ‘உணர்தல்  எனக்கு அரிதாகியே
விடுமோ’  என்பது  பொருள்.  உணர்தல், இங்குத்தலைப்பட்டுணர்தல்,
‘ஒருவன்னை’ என ஒற்று விரித்து ஓதுவதே பாடம் போலும் !