270. ஒட்டா வகை அவுணர்-பொருந்தாத வகைமையை (பகைமைக் குணத்தை) உடைய அசுரர். ‘ஓர் அம்பால் எய்து’ என இயையும், ‘அழல் பட்டு விழுங்க’ என மாற்றுக. ஆங்கு, அசைநிலை. உகந்த-தேவர்களை விரும்புகின்ற. ‘சிட்டம்’ என்பதன் ஈற்றில் அம்முக்குறைந்து நின்றது. சிட்டம்-உயர்வு : கொட்டு ஆம் நடம்-மத்தளம் முதலியவற்றின் முழக்கம் பொருந்திய நடனம். ஆட-ஆடுதலால். ‘ஆடி’ எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். ‘கொடியோரை அழித்து நல்லோரை விரும்பிக் காக்கும் பண்புடையார், என் கோல்வளைகளைக் கொள்வார் ; இது தக்கதோ’ என்றபடி. 271. ஆரே-நற்பண்புடையார் எவர்தாம். இவை படுவார்-இக்குணங்கள் தோன்ற நிற்பார். செய்யுளாதலின் சுட்டுப் பெயர் முன்வந்தது. எனவே, ‘‘இவை’’ என்றது. பிச்சையேற்பார்போல வந்து பெண்டிரை மயங்கச்செய்வனவாய் பின்வருங் குணங்களையாயிற்று. ஐயம்-பிச்சை. ‘‘போர்’’ என்றதை, ‘‘புருவம்’’ என்பதன் பின்னர்க்கூட்டுக. ஏடி-பெண்பால் விளிப்பெயர். ‘புருவத்தால்’ என உருபு விரிக்க. புருவத்தால் போரிடுதலாவது. புருவத்தை நெறித்துக் காதற்குறிப்புணர்த்துதல். இதனை, ‘‘போர்’’ என்றாள்; நோய் மாத்திரமே செய்துபோதலின். தீராநோய் செய்வார்-கெடுத் தொழியும் இயல்பினர். ஓக்கின்றார்-அவரோடு ஒரு தன்மையராய்க் காணப்படுகின்றார். ‘‘ஒக்கின்றார்’’என்றதனால் ‘இவரது இயல்பு அதுவன்று’ என்பது பெறப்பட்டது. |