பால் கொள்ளுதல் அவனது திருவருளையும், அவனுக்குக் கொடுத்தல் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஆம். ‘‘குடி குடி’’ என்றது. ‘குடிதோறும்’ என்னும் பொருட்டாய், ‘எல்லாக் குடியிலும்’ எனப் பொருள் தந்தது. மெய்யடியாராய் உள்ளார் செய்யத்தக்கது இதுவே என்றபடி. குழாம் புகுந்து-கூட்டமாகத் திருவம்பலத்திற் சென்று. ‘புகுந்து கூறுதும்’ என முடிக்க. என்று-என்று புகழ்ந்து சொல்லி. அவற்குப் பல்லாண்டு கூறுதும்’ எனச் சுட்டுப்பெயர் வருவிக்க. ‘‘ஆட்செய்மின்’’ என முன்னிலையாக வேறுபடுத்துக் கூறியது, ‘எம்மொடு குழாம் புகுந்து பல்லாண்டு கூறுதல் நுமக்குங் கடப்பாடாதலின்’ எனக் காரணங்கூறி வலியுறுத்தற் பொருட்டு. இதன் முதலடியும், ஈற்றடியும் ஒரோவொருசீர் மிக்கு வந்தன. 291. நிட்டை-உறைத்து நிற்றல்; அசையாது நிற்றல். இஃது இறைவனிடத்து நிற்றலேயாம். நிற்பது உயிரேயாயினும், அதற்குத் துணையாவது உடலாகலின், அதனை உடன் மேல் ஏற்றி, துணைசெய்யாத உடலை, ‘‘நிட்டை இலா உடல்’’ என்றார். ‘‘நீத்து’’ என்றது, ‘மாற்றி’ என்றபடி. அஃதாவது, ‘நிட்டைக்குத் துணை செய்வதாக ஆக்கி’ என்றதாம். ‘‘என்னை ஆண்ட’’ எனத் தமக்கு அருள்செய்ததையே கூறினார், தம் கீழ்மை காரணமாகத் தமக்கு அருள்புரிந்ததே பெரும் புகழாவது’ என்பது பற்றி. ‘சிட்டனாகிய சிவன்’ என உரைத்து’ ‘தன்னடியாரை எனச் சொல்லெச்சம் வருவிக்க. ‘‘திறங்களுமே’’ என்ற ஏகாரம் உலகியலைச் சிந்தித்தலை விலக்கிற்று. |