எனக் காரணம் வருவித்து, ‘‘பெற்றது’’ என்றதற்கு, ‘பெற்றபயன் என உரைக்க. அங்ஙனம் உரையாவிடில், ‘‘ஆரும்பெறாத அறிவு’ என்றதன் பொருளே பொருளாய்ச் சிறப்பின்றாம். பயன்,சிவானந்தம். ஆர்-அவ்வறிவைப் பெறாத எவர். ‘அத்தகைய பயனை நீவிரும் பெற்றீராதலின். நாம் அனைவரும் கூடிப் பல்லாண்டு கூறுவோம்’ என இயைபுபடுத்துரைக்க. ஊர்-வாழும் ஊர். கழற-எடுத்துச் சொல்லும்படி; இதற்கும் செயப்படுபொருள் இனி வருகின்ற ‘‘ஆள்’’ என்பதே. அதனால், ‘‘உமை மணவாளனுக்கு ஆள்’’ என்பதை, ‘‘உலகில்’’ என்றதன் பின்னே வைத்து உரைக்க. உழறி-அவன் புகழைப்பிதற்றி. ‘பிதற்றி’ என்றார். முற்ற அறியாது அறிந்தவாறே கூறலின். இதனை, ‘‘நாம்’’ என்பதன் பின்னர்க் கூட்டுக. ஆள்-நாம் ஆளான தன்மையை, ‘‘கழற’’ எனவும், ‘‘அறியும் பரிசு’’ எனவும் வேறு வேறு முடிபு கொள்ளுதலால், ‘‘பாரும்’’ என்றது, கூறியது கூறல் ஆகாமை அறிக. பரிசு-தன்மை. ‘பரிசினால்’ என மூன்றாவது விரிக்க. 296. சேல், கயல் என்பன மீன்வகை. ‘சேலும் கயலும் போல’ என உவம உருபு விரிக்க. திளைக்கும்-பிறழ்கின்ற. ‘‘குங்குமம்’’ என்றது. குங்குமங் கூடிய சாந்தினை. ‘குங்குமம் போலும் பொடி மார்பின்கண் இலங்கும்’ என்க. அணி-அழகு. சொற்கிடக்கை முறை இவ்வாறாயினும், ‘மார்பிற் பொடி, கொங்கையிற் குங்குமம்போல இலங்கும்’ என்றல் கருத்தென்க. இதனால் இறைவன் மார்பில் உள்ள திருநீறு, |