பொருந்துவது அன்று. விளக்குகளுக்கு இராசராசேச்சரமுடைய பரமசாமிக்கு முதலாம் இராசராசசோழனும் பொது மக்களும் மிகுதியான நிவந்தம் அளித்துவந்தனர். இவ்விளக்கு ஒன்றுக்கு பெருந்தரம் உத்தரங்குடையான் கேரள வீதிவிடங்கனான வில்லவ மூவேந்த வேளான். முதலாம் இராசராசசோழன் கோழிப் போரில் ஊத்தை அட்டாமல் இருப்பதற்கு ஒரு காசுக்கு மூன்று ஆடு விலை வீதம் ஒன்பது காசுகளை அளித்திருந்தான் என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகின்றது. (ஊத்தை அட்டாமல் - ஊனம் உறாமல்.) இக் கல்வெட்டினால் முதலாம் இராசராசசோழன் கோழி (உறையூர்)ப் போரில் சண்டைசெய்த செய்தி பெறப்படுகின்றது. இச்செய்தியை வரலாற்று ஆசிரியர்கள் எடுத்து ஆண்டதாகத் தெரியவில்லை. அணிகலன்கள்: திருமேனிகளுக்கும், பிரதிமங்களுக்கும் அரசகுடும்பத்தினரும் பிறரும் அணிகலன்களை அளித்தார்கள். அவ்வணிகலன்களின் வகையாவன:- அரதனக்கடகம், பவழக்கடகம், திருக்கைக்காரை, திருப்பட்டிகை, அரதனமோதிரம், நவரத்தினமோதிரம், கண்டநாண், புல்லிகைக்கண்டநாண், பாசமாலை, மாணிக்கத்தின் தாலி, வாகுவலயம், பதக்கம், மாணிக்கத்தின் உழுத்து, வயிர உழுத்து, ஸ்ரீ சந்தம், திருமுடி, வீரபட்டம், உதரபந்தனம், இராசாவர்த்தம், வயிரசாயலம், ஏகாவல்லி, திரிசரம், பஞ்சசரி, திரள் மணிவடம், தாலிமணிவடம், பொன்னாணியிற்கோத்த மாணிக்கத்தின்திரு, திருக்குதம்பை, தோடு, திருக்கால்வடம், முத்தின்சூடகம், முத்து மாத்திரை முதலானவைகள் ஆகும். நில நிவந்தம்:- முதலாம் இராசராசசோழன் தஞ்சை இராசராசேச்சரமுடைய பரமசுவாமிக்கு வேண்டும் நிவந்தங்களுக்கு ஆண்டுதோறும் சற்றேறக்குறைய ஒன்றரை லட்சம் கலம் நெல் வருவாய் உள்ள நிலங்களைத் தேவதானமாகச் சோழமண்டலத்திலும்,புறமண்டலங்களிலும் கொடுத்துள்ளான். |