அரசனுடைய கட்டளைப்படி, நான்குவேலி நிலம் இராசராசன் பெருவிலையாக 20750 காசுக்குப் பூவனூர் சிவதானப் பெருமாளுக்கு விற்கப்பட்டது. அச்சிவதானப்பெருமாள் அந்நிலத்தைத் திருவிடைக்கழிப் பெருமானுக்குச் சிறுகாலைச் சந்திக்குக் கொடுத்துள்ளான். இந்நிகழ்ச்சி இராசராசதேவரின் 8 ஆம் ஆண்டு 26ஆம் நாளில் நிகழ்ந்தது. கற்பகஞ்சேரி நாராயணன் கட்டிய ஒருமடத்துக்குத் திருவிடைக்கழியிலும் மற்றுமுள்ள ஊர்களிலும் அரசன் கட்டளைப்படி நிலங்கள் விடப்பட்டன. இது கோனேரின்மை கொண்டானின் 21-ஆம் ஆண்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியாகும். இரண்டாம் பிராகாரத்து வடக்குமதில் சுவரில் இரண்டு பிரதிமங்கள் செதுக்கப்பட்டு அவைகளின் தலைப்பில் பொற்கோயில் நம்பி, தில்லைமூவாயிர நம்பி என்னும் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இப்பிரதிமங்களின் கீழ், ஒருமேடையில் ரிஷபம், அதன்கீழ் ஒரு இடையன், குடம், பாம்பு இவைகளும், இவைகளுக்கு மேற்கில் அதே சுவரில் ஆறு உருவங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஆறாவது உருவம் ஒரு அரசனாகக் காட்சி யளிக்கிறது. இந்நிகழ்ச்சி இத் தலவரலாற்றைக் குறிக்கலாம். குறிப்பு: திருவிசைப்பாப் பெற்ற தலங்கள் 13 ஆகும். இவைகளுள் ஐந்துதலங்களுக்குத் (கோயில், திருவீழிமிழலை, திருவாவடுதுறை. திருப்பூவணம், திருவிடைமருதூர்) தருமை ஆதீன வெளியீட்டுத் திருமுறைகளில் வரலாறுகள் வெளிவந்துள்ளன. எஞ்சிய 8 தலங்களுக்கு, இங்கே எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளன. |