50


மேற்குப்   பாகத்தில்  இலிங்கத்திருமேனி  இருக்கின்றது. இருவர்க்கும்
இம்முறைப்படியே      விமானங்களும்       கட்டப்பட்டிருக்கின்றன.
தெய்வயானை    அம்மையார்க்குத்    தனிக்கோயில்    இருக்கின்றது.
சிவபெருமானுக்குரிய அம்மன்கோயில் இக்கோயிலில் இல்லை.

சிவபெருமானின் திருப்பெயர்: திருக்காமேசுவரர்.

தீர்த்தம் :சரவணப்பொய்கை.

தலத்துக்குரிய மரம்: குரா.

கல்வெட்டு வரலாறு:

இக்கோயில்        கல்வெட்டுக்களில்         முருகப்பெருமான்
திருக்குராத்துடையார்  என்று   குறிக்கப்பட்டுள்ளனர்.    இவ்வூரில்
சேனாபதிப்பிள்ளைப்     பெருந்தெருவில்    குறும்பனாங்குடையான்
கூத்தன்   சிவதவகன்   என்னும்   வியாபாரி  எழுந்தருளுவித்துள்ள
ஐந்நூற்றுவப் பிள்ளையார்க்கு வழிபாட்டிற்குத் திருநாமத்துக் காணியாக
திருவிடைக்கழிப்பெருமக்கள்   (Assembly)   நிலத்தைத்  திரிபுவனச்
சக்கரவர்த்தி   இராசேந்திர   சோழனின்   11-ஆம்  ஆட்சியாண்டில்
அளித்துள்ளனர். இவ்வூரில் திருவலஞ்சுழியுடையான் மண்டபம் என்று
ஒரு மண்டபம் இருந்தது.

திருக்குடந்தைமடம்   என்று ஒரு மடம் இருந்தது. அம்மடத்தில்
கோக்காட்டு       நாராயணன்ராமன்       அருளாளப்பெருமாளை
எழுந்தருளிவித்துள்ளான்.  அதற்குப்  பொன்னம்பலநம்பி  நல்லாடை
மாங்குடியில் இரண்டுமா நிலத்தைக் கொடுத்துள்ளான். இது நிகழ்ந்தது
திரிபுவனச்சக்கரவர்த்தி  இராசராசதேவரின் 19- ஆம் ஆட்சியாண்டில்
ஆகும்.

குன்றத்துநாராயணன்,     இவ்வூரில் மடம் ஒன்றை நிறுவி அதன்
பொருட்டுப்  போதிமங்கலத்தில் 5வேலி சொச்சம் நிலத்தை விலைக்கு
வாங்கி  அம்மடத்தில்  மலையாளத்திலிருந்து வந்து வேதம் படிக்கும்
பிராமண    மாணவர்களின்   செலவினங்கட்குக்   கொடுத்துள்ளான்.
திருவிடைக்கழிச்சபையார்  அந்நிலத்தை  இறையிலியாகச்  செய்தனர்.
இந்நிகழ்ச்சி   திரிபுவனச்சக்கரவர்த்தி   இராசராசதேவரின்  13 ஆம்
ஆண்டில் நிகழ்ந்தது.


1. See  the  Annual  report  on South Indian Epigraphy for the year 1925-Nos. 263-277.