60


அவ்வூர்     மக்கள்  நெல்லையப்பரை      வேண்ட  அப்பெருமான்
கருவூர்த்தேவரை  நெல்லையம்பதிக்கு  அழைத்து வந்து  காட்சியளிக்க,
மீண்டும்  அவ்வாலயம்  செழித்தது  என்றும் கூறுவர்.  கருவூர்த்தேவர்
நெல்லையில்   இருந்து  திருக்குற்றாலம்   சென்று   அங்குச்  சிலநாள்
தங்கியிருந்து,  பொதிய  மலையை அடைந்து  அகத்தியரைத்  தரிசித்து
அருள்பெற்றார்.

தஞ்சையில்     முதலாம் இராசராசசோழன் (கி.பி.985-1014)   தனது
இருபதாம்    ஆண்டு    ஆட்சிக்காலத்தில்    கட்டத்   தொடங்கிய
இராசராசேச்சரத்துப்    பெருவுடையார்க்கு   அஷ்டபந்தன    மருந்து
சார்த்தினன்.  அம்மருந்து  பலமுறை  சார்த்தியும்  இறுகாமல்  இளகிக்
கொண்டிருந்தது.  அது கண்ட அரசன் வருந்தி  இருந்தனன்.  அதனை
அறிந்த         போகமுனிவர்       பொதியமலையில்      இருந்த
கருவூர்த்தேவரைத்தஞ்சைக்கு  வருமாறு  அழைப்பித்தார்.    கருவூர்த்
தேவரும்  குரு  ஆணைப்படி  தஞ்சை  வந்து, பெருமான்   அருளால்
அஷ்டபந்தன மருந்தை இறுகும்படிச் செய்தருளினார்.

தஞ்சையினின்றும்    திருவரங்கம் சென்று பின்னர்த் தம்  கருவூரை
வந்தடைந்தார்.  கருவூரில்  உள்ள வைதிகப்பிராமணர் பலர்  கருவூர்த்
தேவரை  வைதிக  ஒழுக்கம்  தவறியவர்  என்றும், வாம  பூசைக்காரர்
என்றும்  பழிச்சொல்சாற்றி  தொல்லைகள்  பல  தந்தனர்.    கருவூர்த்
தேவர்   அவர்களுக்குப்   பயந்தவர்   போல   நடித்து,    ஆனிலை
ஆலயத்தை  அடைந்து,  பெருமானைத்  தழுவிக்கொண்டார்   என்பது
புராண வரலாறு.

கருவூர்த்  தேவரின்  திருவுருவச்சிலை   கருவூர்ப்   பசுபதீஸ்வரர்
கோயிலிலும், தஞ்சைப் பெரிய கோயிலிலும் விளங்குகிறது.

இவர்,  கோயில், திருக்களந்தை ஆதித்தேச்சரம், திருக்கீழ்க்கோட்டூர்
மணியம்பலம்,     திருமுகத்தலை,     திரைலோக்கிய        சுந்தரம்,
கங்கைகொண்டசோழேச்சரம்,    திருப்பூவணம்,     திருச்சாட்டியக்குடி,
தஞ்சை,  திருவிடைமருதூர்  என்ற  பத்து சிவத்தலங்கட்கு   ஒவ்வொரு
பதிகங்கள்    வீதம்    பத்துத்   திருவிசைப்பாத்     திருப்பதிகங்கள்
பாடியுள்ளார்.

காலம்:-

இவர்,     தஞ்சை இராசராசேச்சரம், கங்கைகொண்ட  சோழேச்சரம்
ஆகிய இரண்டு  தலங்களையும் பாடியிருத்தலின் இவரது காலம்  கி.பி.10
ஆம்   நூற்றாண்டின்    கடைப்பகுதியிலும்,  11  ஆம்   நூற்றாண்டின்
முற்பகுதியிலும் வாழ்ந்தவர் எனலாம்.