காலம்: கண்டராதித்தர் கி.பி. 950 முதல் கி.பி. 957 வரை வாழ்ந்தவர். ஆதலின் இவர் காலம் 10-ஆம் நூற்றாண்டு என்பது தெளிவு. 6. வேணாட்டடிகள் திருவிசைப்பாவை அருளிச்செய்த ஆசிரியர்களில் ஆறாமவராக விளங்குபவர் வேணாட்டடிகள். அக்காலத்தில் கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டு பகுதியாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ‘‘தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி பன்றி அருவா அதன் வடக்கு-நன்றாய சீதம் மலாடு புனல்நாடு செந்தமிழ் சேர் ஏதமில் பன்னிரு நாட் டெண்.’’ என்பது பழைய பாடல். இவற்றுள் வேணாடு என்பது சேர நாட்டிற்கும் தென் பாண்டிநாட்டிற்கும் நடுவே திகழும் அண்மையில் உள்ளது. வேணாட்டில் தோன்றிய இவரை வேணாட்டடிகள் என்றே எல்லோரும் வழங்கினர். அதனால் இவரது இயற்பெயர் தெரிந்திலது. இவர் அந்நாட்டு அரசர் குலத்தில் தோன்றி துறவு மேற்கொண்டவர் என்பர். இவர் சிவபெருமானிடத்துக் கொண்ட அளவற்ற பக்திப் பெருக்கால் பல சிவதலங்களுக்கும் சென்று சிவபெருமானைப்பாடி வழிபட்டார். இவர் பாடிய திருவிசைப்பாப் பதிகம் ஒன்றே உள்ளது. அப்பதிகம் (கோயில்) சிதம்பரத்தில் எழுந்தருளிய இறைவன்மீது பாடியது. இவரைப்பற்றிய பிற செய்தி கிடைக்கவில்லை. 7. திருவாலி யமுதனார் திருவிசைப்பாவை அருளிச்செய்த ஆசிரியர்களில் ஏழாமவராகத்திகழ்பவர் திருவாலி யமுதனார். இவர் திருமயிலையில் வைணவ அந்தணர் குலத்தில் தோன்றியவர். சோழநாட்டில் சீகாழிப்பதிக்கு அருகில் உள்ளது திருவாலிநாடு. அதன் தலைநகர் திருவாலி. இந்நகரில் எழுந்தருளியிருக்கும் திருமாலுக்குரிய பெயர் அமுதன் என்பது. இவர்தம் பெற்றோர்கள் திருவாலி அமுதனாரிடத்து அளவிறந்த பக்தி பூண்டிருந்த காரணத்தால் |