தேவரின் காதல் கனிந்த கவிதை நெஞ்சம் அளிக்கும் இந்த அற்புதமான கவிதைக் கனிதான் எத்துணைச்சுவையை உள்ளடக்கி நிற்கின்றது! பாடல்நெறி: வாழ்வின் உயிர்த்துணை, - ‘வாழ்முதல்’ பரம்பொருளைத் தவிர வேறு இல்லை என்பதை அநுபவத்தில் அறிந்த அருளாளர் பாட்டு, சிந்திக்கச் சிந்திக்கச் சுவை பயப்பதுடன் நம் வாழ்வையும் திருத்தி ஆட்கொள்ளும் அருமை உடையது. அத்தகு அருட்பாட்டால் இறைவனைப் போற்றுவதையும் ஒரு வழிபாடு என்றே கொள்ளவேண்டும். ‘பாடல்நெறி’ என்று திருமுறை தெளிவுறுத்துவது இதுவேயாகும்’. இந்தப் பாடல் நெறி, ‘பாடல் சான்ற புலனெறி வழக்கம்’ என்று சங்க காலத்தே, தொல்காப்பியர் காலம் தொடங்கி வளர்ந்து முறுகி முகிழ்க்கும் ஒன்றே என்று கூடக் கூறலாம். பாடல் வடிவம்: கருவூர்த்தேவரின் கவிதைகள் நூற்றிரண்டு, ஒன்பதாம் திருமுறையில் ஒளிர்கின்றன.2 அவற்றுள் ஒன்றே இங்குத் தொடக்கத்திற் சிந்தித்த தூயபாடல்: அவ்வழகுப்பிழம்பு அடியில் வருவது ஆகும்: ‘‘இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும் ஏழையேற் கென்னுடன் பிறந்த ஐவரும் பகையே யார்துணை யென்றால் அஞ்சலென் றருள்செய்வான் கோயில் கைவரும் பழனம் குழைத்த செஞ்சாலிக் கடைசியர் களைதரு நீலம் செய்வரம் பரும்பு பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம்பலமே.’’ முற்கூறியவாறு, 3ஆம், 4ஆம் வரிகளிற் கூறப்பெறும் இயற்கை வருணனைத் திறம் ஆழப் பொருள் உடையது.
1. Introduction to the Tamil translation of ‘Sivanantalahari’ by Prof. T.P.Meenakshisundaranar. (1941) 2. திருவிசைப்பா- பா. 80 to 182. |