நம்பி மூத்தபிரானை வெண்கடம்பும், பருதியஞ் செல்வனை மலர்ந்த செருந்தியும், மீனக் கொடியுடைய மன்மதனைக் காஞ்சி மரங்களும், அவன் தம்பி சாமனைப் பூக்கள் நெருங்கின ஞாழல் தருக்களும், இடபக் கொடியுடைய இறைவனை இலவங்களும் காட்டுவதாகக் கூறுகிறார் பெருங்கடுங்கோ. இனி இறைவனையும் இயற்கையையும் ஒன்றில் ஒன்றாகக் கண்டு காரைக்காலம்மை பாடுகிறார். தீயின் இயற்கையான செம்மைப் பண்பால் திருக்கரம் சிவந்ததா! திருக்கரத்தின் செம்மையால் அழல் சிவந்ததா! என்று வேறுபடுத்தவொண்ணா இறைவனோடு கூடிய இயற்கையை நமக்கு விண்டுரைக்கின்ற காரைக்காலம்மையாரின் பாட்டு:- ‘‘அழலாட அங்கை சிவந்ததோ அங்கை அழகால் அழல்சிவந்த வாறோ- கழலாடப் பேயாடு கானிற் பிறங்க அனலேந்தித் தீயாடுவாய் இதனைச் செப்பு’’ என்று வரும். ஒன்பது அருளாளர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு இந்நூல்.1. திருமாளிகைத் தேவர் 2. சேந்தனார். 3.கருவூர்த் தேவர்.4. பூந்துருத்திநம்பி காடநம்பி. 5.கண்டராதித்தர். 6. வேணாட்டடிகள். 7. திருவாலியமுதனார். 8. புருடோத்தம நம்பி. 9. சேதிராயர் ஆகிய இவர்கள் திருவிசைப்பாக்களையும் சேந்தனார் திருப்பல்லாண்டையும் பாடியுள்ளார். திருமுறையிலுள்ள முந்நூற்றொரு பாடல்களில் பெரும்பான்மையான பாடல்கள் தில்லைத்தலம் பற்றி யெழுந்தனவே. இவர்கள் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்தவர்கள் என்றாலும் அனைவருமே சமயாசாரியர்களின் அடியொற்றிச் செல்லும் நோக்குடையார் என்பதைப் பாடல்கள் தெரிவிக்கின்றன. தேவார ஆசிரியர்களின் பாநலம் இதனுள் பயன்படுத்தப்படுகிறது. திருவாசகப் பாடல்கள் பல. கருத்தும் சொல்லமைப்பும் மாறாமல் எடுத்தாளப்பட்டுள்ளன. பெரிய புராண அடியார்கள் பலர் இத்திருமுறையுள் குறிக்கப்படுகின்றனர். இனி நாம் நயம்பொதிந்த இலக்கிய இயற்கைத் தன்மையோடு கூடிய சில பாடல்களைச் சிந்தனைக்கு விருந்தாக்கிக் கொள்வோம். புது மத்தம் மிலைந்த புனிதன்: அந்திபோலும் உருவம்-பிள்ளை மதிக்கொழுந்தணிந்த பொன்சடை விரித்து, நினைக்க இனிக்கும் திருவடிதூக்கி, எரிதரு |