காட்டில் பிணத்தின் நிணமுண்டு ஏப்பமிடும் பேய்க்கணங்கள் எழுந்தாட, தூங்கிருள் நடுநல் யாமத்தே அருள்புரி முறுவல் முகிழ் நிலாவெறிப்ப அவன் ஆடுகின்ற ஆட்டத்தாலன்றோ உலகம் இயங்குகின்றது. அரவணிந்த பெருமானின் பெருமையைத்தான் அடியார்கள் எப்படியெல்லாம் பாடியுள்ளனர். ‘‘நீறணி பவளக் குன்றமே நின்ற நெற்றிக் கண்ணுடைய தோர் நெருப்பே வேறணி புவன போகமே யோக வெள்ளமே!’’ என விளிப்பார் திருமாளிகைத் தேவர். ‘‘அற்புதத் தெய்வமிதனின் மற்றுண்டோ? அன்பொடு தன்னை யஞ்செழுத்தின் சொற்பதத்துள் வைத்து உள்ள மள்ளூறும் தொண்டர்.’’ தமக்கு அவன் கற்பகமே என்பார் கருவூர்த் தேவர். உண்மை தான். கருவூர்த் தேவர் காட்டுவதுபோல் இவன் அற்புதத் தெய்வந்தான். காரணம் என்ன தெரியுமா? அரிவையோர் கூறுகந்தும் ஆசை வாழ்வு நடத்தவில்லை. கங்கையைத் தலையில் தாங்கியிருந்தும் காமக் கடலுள் மூழ்கவில்லை. புவன உயிர்களின் போகத்திற்காகப் பெண்ணோடிணைந்துள்ளான். பெண்ணைத் தன் பாதியில் வைத்திருந்தும் யோகியாக வாழ்பவன் அற்புதச் சித்தன் தானே’ ‘மங்கை யோ டிருந்தே யோகு செய்வானை’ என்று பின்னும் ‘அற்புத’ த்திற்கு விளக்கம் தருகிறார் இவர். செம்மனத்தார் தொழு சோதி: ‘‘செம்மனக் கிழவோர் அன்புதா வென்றுன் சேவடி பார்த்திருந் தலச எம்மனங் குடிகொண் டிருப்பதற்கு யானார் என்னுடைய அடிமைதான் யாதே?’’ என்று கருவூர்த் தேவர் மட்டுமல்ல-ஆணவ நெறிச்சென்று அடிமுடி தேடிய மாயோனும் மலரவனுமே ஏங்குகிறார்கள். |