| 185. | இருந்தனம் எய்தியும் நின்றுந் திரிந்துங் கிடந்தலைந்தும் வருந்திய வாழ்க்கை தவிர்த்திடு போகநெஞ் சே,மடவாள் பொருந்திய பாகத்துப் புண்ணியன், புண்ணியல் சூலத்தெம்மான் திருந்திய போதவன் றானே களையும்நம் தீவினையே. | | 17 |
| 186. | தீவினை யேனைநின்(று) ஐவர் இராப்பகல் செத்தித்தின்ன மேவின வாழ்க்கை வெறுத்தேன்; வெறுத்துவிட் டேன்வினையும் ஓவின(து) உள்ளந் தெளிந்தது கள்ளங் கடிந்(து) அடைந்தேன் பாவின செஞ்சடை முக்கணன் ஆரணன் பாதங்களே. | | 18 |
185. பொழிப்புரை: நெஞ்சே, நாம் தவறு செய்யாமல் திருந்தும் பொழுது, மாதொரு பாகத்துப் பொருந்தப் பெற்ற புண்ணிய வடிவினனும், கொடியோரை அழித்தலால் அவர் புண் பொருந்திய சூலத்தை ஏந்தியவனும் ஆகிய எம் சிவபெருமான் நமது தீவினைகளை யெல்லாம் அவனே முன் வந்து நீக்கிவிடுவான். (ஆகையால் நீ திருந்து. அஃதாவது,) நின்றும், திரிந்தும், கிடந்து அலைவுற்று மிக்க பொருளை ஈட்டியபோதிலும் வருத்தத்தையே தருகின்ற இவ்வுலக வாழ்க்கையே (நீ விரும்புதலை விடுத்து,) அஃது உன்னை விட்டு நீங்கும்படி நீக்கு. குறிப்புரை: "நெஞ்சே" என்பது முதலாகத் தொடங்கி, 'நம் தீவினையைக் களையும்' எனவும் 'இருந்தனம் எய்தியும் வருந்திய' எனவும், 'போகத் தவிர்த்திடு' எனவும் இயைத்து உரைக்க. 'திருந்தா நிலையாவது இது' என்பதையே வாழ்க்கை யின் விளக்கமாக முதலிற் கூறினார். 'அலைந்தும்' என்னும் உம்மையைப் பிரித்து, "கிடந்து" என்பதனுடன் கூட்டுக. 'இறைவன் நமக்கு அருளாமைக்குக் காரணம் நமது குற்றமே யன்றி, அவனது குற்றம் அன்று' என்பதை விளக்கியவாறு. திருந்துதலுக்கு 'நாம்' என்பதே தோன்றா எழுவாய் ஆதல் அறிக. "இருந்தனம் எய்தியும் வருந்திய வாழ்க்கை" என்றது உலக வாழ்க்கையின் இயல்புணர்த்தியது. 186. பொழிப்புரை: தீவினையை பெரிதும் உடைய என்னை ஐம்புலன்களாகிய வேடர், கருவி கொண்டு சிதைத்துத் தின்னுதல் போன்ற துன்பத்தை உறுவிக்கும்படி இதுகாறும் பொருந்திநின்ற வாழ்க்கையை இது பொழுது நான் வெறுத்து விட்டேன். அதனால் எனது சஞ்சித வினைகளும் என்னை விட்டு ஒழிந்தன. அதனால் எனது உள்ளம் சிவனைவஞ்சித்து ஒழுகுதலை விலக்கித் தெளிவடைந்தது. நான் விரிந்த, சிவந்த சடையையும், மூன்று கண்களையும் உடையவனும், வேதப் பொருளாய் உள்ளவனும் ஆகிய அவனது திருவடிகளையே சார்பாகச் சார்ந்தேன்.
|