பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை104

187.பாதம் புவனி; சுடர்நய னம்புவ னமுயிர்ப்(பு)ஓங்(கு)
ஓதம் உடுக்கை உயர்வான் முடிவிசும் பேயுடம்பு
வேதம் முகம்;திசை தோள்;மிகு பன்மொழி கீதமென்ன
போதம் இவற்கோர் மணிநிறந் தோற்பது பூங்கொடியே.

19


குறிப்புரை: இருவினை ஒப்பு, மல பரிபாகம், சக்தி நிபாதம் இவை வந்தபொழுதே இவையெல்லாம் நிகழ்வன ஆகலின், 'இதுபொழுது' என்பது வருவித்துரைக்கப்பட்டது. உள்ளம் தெளியாமைக்குக் காரணம் சஞ்சித கன்மமேயாதலின் "ஓவினது" எனப்பட்ட வினை அதுவேயாயிற்று. 'இவ்வினை சக்தி நிபாதர்க்கு ஞான குருவால் அழிக்கப்படும்' என்பது சைவ சித்தாந்தம். ஆயினும், "சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின்" 1 என்னும் திருக்குறளின் உரையில் பரிமேலழகர்,

"அவ்வழிக் (ஞானத்தைப் பெற்றுவிட்ட பின்பு) கிடந்த துன்பங்கள் எல்லாம் என் செய்யும் - என்னும் கடாவை ஆசங்கித்து, - அவை ஞான யோகங்களின் முதிர்ச்சியுடைய உயிரைச் சார மாட்டாமையானும், வேறு சார்பின்மையானும் கெட்டுவிடும் - என்பது இதனாற் கூறப்பட்டது"

என்றார். இன்னும் அவர் இதற்குமுன் சஞ்சித கன்மத்தைப் பற்றி,

"சாரக் கடவனவாய் நின்ற துன்பங்களாவன, பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரான் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள் இறந்த உடம்புக ளான் அனுபவித்தனவும், பிறந்த உடம்பான் முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும் அனுபவிக்கக் கடவன வாய்க் கிடந்தன"

என விளக்கம் தந்தார். "ஐவர்" என்றது தொகைக் குறிப்பு உருவகம். செத்தித் தின்னல், வினைநிலை ஒட்டு, "கான முயல் எய்த அம்பினில் யானை - பிழைத்த வேல் ஏந்தல் இனிது"2 என்றது போல, இஃது "அடையும் பொருளும் அயற்பட மொழி தல்"3 என்பதனானே அடை அயற்பட மொழிதலாய் அடங்கும். ஆயினும் பரிமேலழகரும் இது பற்றி வாளா போயினார்.

187. பொழிப்புரை: என் மகளால் காதலிக்கப்பட்ட இவனுக்கோ இவளால் தழுவப்படுவதோர் உடம்பில்லை. மற்று, இவனுக்கு நிலமே பாதங்கள்; கதிரும் மதியுமே கண்கள்; காற்றே மூச்சு; பெரிய கடலே உடை; உயர்ந்த வான முகடே தலை; எங்கும் பரந்துள்ள வானமே உடல்; வேதங்களே வாய்; திசைகளே தேர்கள்; பல வகையினவாய் வழங்குகின்ற மொழிகளே இவன் பாட்டு. இங்ஙனமாக, இவன்


1. திருக்குறள் - 359.
2. மேற்படி - 772.
3. தண்டியலங்காரம் - 51.