பக்கம் எண் :

மூலமும் உரையும்103



     இனிக் கல்வியும் இறைவனுடைய திருவருளால், உண்டாக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருதலும் தானே அக்கடவுளர்க்கு உறைவிடமாதலும். அங்ஙனமே மேருவும் கடவுளால் உண்டாக்கப்பட்டுத் தானே அக்கடவுளர்க்கு உறைவிடமாதலும் காண்க. தேவர்மூவர்-நான்முகன் முதலியோர். தமனியச் சைலம்-பொன்மலை.

6-10: அளக்க...........................................ஆகியும்

     (இ-ள்) அளக்க என்று அமையாப் பரப்பினதானும்; யாரானும் அளந்தறிதற்கு இயலாத விரிவுடைமையானும்-அமுதமும் திருவும் உதவுதலாலும்-உலகினுக்கு அமுதத்தையும் திருவினையும் வழங்குதலானும்; பலதுறை முகத்தொடு பயிலுதலானும்-பலவாகிய துறைமுகங்களை உடைத்தாய் இயங்குதலானும்; முள் உடை போட்டு முனைஎறி சுறவம் அதிர்வளை தடியும் அளக்கர் ஆகியும்-இவ்வேதுக்களால் முள்ளையுடைய கோட்டின் முனையாலே கொல்லுகின்ற சுறாமீன் முழங்குகின்ற சங்கினைக் கொல்லுதற்கிடனாகிய கடலை ஒத்தும் என்க.

     (வி-ம்.) யாவரானும் அளக்கப்படாமை கல்விக்கும் கடலுக்கும் பொருந்துதல் உணர்க. இனி, கல்வி அமுதம் திரு என்னும் மங்கல மொழிகளால் தொடங்குதலும் அல்லதூஉம் பயில்வோர்க்கு அமுதம்போன்று சுவைத்தலும் திருவுண்டாக்குதலும் உடைத்தாதல் காண்க. கடல் அமுதத்தையும் திருமகளையும் அளித்தமை புராணங்களால் உணர்க. கல்வியும் பல்வேறு துறைகளை உடைத்தாதலும் கடலும் அங்ஙனமே பற்பல துறைகளை உடைத்தாதலும் உணர்க. கோட்டு முனையால் எறிகின்ற சுறவம் என்க. அதிர்வளை-முழங்கும் சங்கம். அளக்கர்-கடல்.

11-12: நிறை........................................ஆகியும்

     (இ-ள்) நிறை உளம் கருதின் நிகழ்ந்தவை நிகழ்பவை தருதலின்-நிறைந்த நெஞ்சம் நினைக்குமிடத்தே நிகழ்ந்த பொருள்களையும் நிகழப்போகும் பொருள்களையும் வழங்குதலாலே; வானத்தரு ஐந்து ஆகியும்-வானுலகத்திலுள்ள கற்பக முதலிய தருக்கள் ஐந்தையும் ஒத்தும் என்க.

     (வி-ம்.) நிறைஉளம் என்பதற்குக் கல்வியால் நிறைந்த உள்ளம் என்றும், அவா நிறைந்த உள்ளம் என்றும் பொருளுக்கும் உவமைக்கும் ஏற்றபெற்றி பொருள் கொள்க. கல்வியுடையோர் இறந்தகாலப் பொருளையும் எதிர்காலப் பொருளையும் அறியும் ஆற்றலுடையராதலும் கற்பகத் தருவினை வழிபடுவோர் நினைக்குங்கால் முக்காலப் பொருளையும் அக்கற்பகத்தரு வழங்கும் என்பதனையும் உணர்க. தருவைந்தும் எனல் வேண்டிய முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. ஐந்தருவாவன சந்தானம், தேவதாரம், கற்பகம், மந்தாரம், பாரிசாதம் என்பன. இவை பொன்னுலகில் உள்ளன: வேண்டுவோர் வேண்டும் பொருளை யீவன.