|
(இ-ள்) மறை வெளிப்படுத்தலின்-மறைகளைத்
தோற்றுவித்தலாலும்; கலைமகள் இருத்தலின்-தன்பால் எப்பொழுதும் கலைமகள் குடிகொண்டிருத்தலாலும்;
அகமலர் வாழ்தலின்-(உள்ளத்) தாமரைமலரின்கண் வாழ்தலாலும்; பிரமனாகியும்-நான்முகனை
ஒத்தும் என்க.
(வி-ம்.) இதன்கன்
மறைவெளிப்படுத்தல் என்புழிக் கல்விக்கு மறைந்துள்ள நுண்பொருளையும் வெளிப்படுத்திக்
காட்டுதல் என்றும், பிரமனுக்கு வேதங்களைத் தோற்றுவித்தல் என்றும் பொருள் காண்க.
கலைமக்ளிருத்தல் உவமைக்கும் பொருளுக்கும் ஒத்தல் உணர்க. அகமலர் வாழ்தல் என்புழி.
கல்விக்கு உள்ளத்தாமரையில் உறைதல் என்றும், பிரமனுக்கு மலரகம் என மாற்றித் தாமரை
மலரின்கண் வாழும் என்றும் பொருள் கொள்க.
15-16:
உயிர்............................ஆகியும்
(இ-ள்) பரிந்து உயிர்
அளித்தலின்-இரங்கி உயிரைப் பாதுகாத்தலானும்; புலமிசை போக்கலின்-தன்னுருவத்தை
(உலகிற்கு) அறிவுடைமையின்கண் உயரச் செலுத்துதலினாலும்; படி முழுது அளந்த நெடியோன்
ஆகியும்-உலகம் முழுவதையும் தன் அடியினாலே அளந்தருளிய திருமாலை ஒத்தும் என்க.
(வி-ம்.) உயிர்-ஈண்டுச்
சிறப்பினால் மாந்தர் உயிர் என்பதுபட நின்றது. திருமாலும் கல்வியும் உயிர்களைப்
பாதுகாத்தல் உணர்க. புலமிசை போக்கலின் என்புழிக் கல்விக்கு அறிவை உயர்த்துதலால்
எனவும் திருமாலுக்குக் கூறுங்கால் தன்னை உலகிற்கு அப்பாற் போக்குதல் என்றும் பொருள்
கொள்க. புலம்-அறிவு, உலகம் என்பது பலபொருள் ஒருசொல். படி-நிலம். நெடியோன்-திருமால்.
அளித்தலினும் போக்கலினும் எனல் வேண்டிய உம்மைகள் தொக்கன.
17-19:
இறுதி...............................ஆகியும்
(இ-ள்) இறுதியில்
சலியாது இருத்தலானும்-பேரூழி முடிவினும் அழிகின்ற நிலைத்திருத்தலாலும்; அறுமை தந்து
உதவும் இருமையானும்-ஆறு உறுப்புக்களையும் தன்னிடத்துண்டாக்கி உலகிற்கு வழங்கும் பெருமை
உடைமையானும்; இடம் பெண்கலந்த புண்ணியன் ஆகியும்-இடப்பாகத்தே உமையை வைத்துள்ள
அறவோனாகிய சிவபெருமானை ஒத்தும் என்க.
(வி-ம்.) அறுமை-ஈண்டு
ஆறு என்னும் எண்ணின்மேல் நின்றது. இருமை வகை தெரிந்து ஈண்டறம் பூண்டார் எனவும்,
தெரிமாண்டமிழ் மும்மைத் தென்னம் பொருப்பு: எனவும் வருவன
|