பக்கம் எண் :

110கல்லாடம்[செய்யுள்12]



(உரை)
கைகோள் கற்பு. தலைவன் கூற்று

துறை: முன்னிகழ்வுரைத்தூட றீர்த்தல்.

     (இ-ள்) இதற்கு, “கரணத்தி னமைந்து முடிந்த காலை” (தொல்-கற்பி. 5) எனவரும் நூற்பாவின்கண்.

“பயங்கெழு துணையணை புல்லிய புல்லா
 துயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப்
 புல்கென முன்னிய நிறையழி பொழுதின்
 மெல்லென் சீறடி புல்லிய இரவிலும்”

எனவரும் விதிகொள்க.

1-4: குரவம்..................................பொருந்தி

     (இ-ள்) குரவம் மலர்ந்த இருள்குவை குழலி-குரவ மலர்மாலை மலர்ந்துள்ள குவிந்த இருட்குவியல் போன்ற கூந்தலை யுடையோய்!; ஒருகால் இருவேமும் எரி அதர் இறந்து-முன்பொரு பொழுது நாமிருவரும் தீயையுடைய பாலைநில வழியிலே சென்று; விரிதலை தோல் முலைவெள்ளாய் எயிற்றியர்க்கு-விரிந்த தலையினையும் தோலாகிய முலையினையும் வெள்ளிய வாயினையுமுடைய பாலைநில மகளிர்க்கு; அரும் புது விருந்து எனப் பொருந்தி-அவர்கட்குக் கிடைத்தற்கரிய புதிய விருந்தென்று அவர் பாராட்டும்படி பொருந்தி என்க.

     (வி-ம்.) இது தனோடு ஊடிக்கிடந்த தலைவியின் அடியை வருடியவாறே அவள் விரும்பிக் கேட்கும்படி பண்டு நிகழ்ந்த நிகழ்ச்சி யொன்றினைத் தலைவன் அவட்குக் கூறத்தொடங்கியபடியாம். குரவம்-குரவமலர். குவை-குவியல். குழலி விளி. இருட்குவியல் தலைவியின் கூந்தலுக்குவமை. ஒருகால் என்றது உடன்போக்கு நிகழ்ந்த காலத்தை. எரி-தீ. அதர்-வழி. தோல்முலை-வற்றித் தோலாகித் தூங்குகின்ற முலை. விரிதலைத் தோன்முலை வெள்வாய் எயிற்றியர் என்னுந் தொடர் சொல்லோவியமாய்த் திகழ்தல் உணர்க. ஒப்பாரும் மிக்காரும் இலராகிய தலைவனும் தலைவியும் எயிற்றியர்க்குக் கிடைத்தற்கரிய விருந்தாதல் உணர்க. அரிய விருந்தினைப் பாராட்டுதலை,

“கூடன் மகளிர் கோலங் கொள்ளும்
ஆடகப் பைம்பூ ணருவிலை யழிப்பச்
செய்யாக் கோலமொடு வந்தீர்க் கென்மகள்
ஐயை காணீ ரடித்தொழி லாட்டி
பொன்னிற் பொதிந்தேன் புனைபூங் கோதை
என்னுட னங்கையீங் கிருக்கெனத் தொழுது” (சிலப். மதுரைக். 14. 9. 14)

எனவரும் மாதிரி கூற்றானும் உணர்க,