|
அழகுடைய தடாதகையை;
அருமறை விதிக்கத் திருமணம் புணர்ந்து-நான்முகன் சடங்கு காட்டத் திருமனம் புணர்ந்து;
மதிக்குலம் வாய்த்த மன்னவன் ஆகி-திங்கள் மரபிற்றோன்றிய பாண்டிய மன்னனாய்;
மேதினி புரக்கும் விதியுடை நன்னாள்-இந்நில உலகத்தினைப் பாதுகாத்தருளும் முறைமையினையுடைய
நல்ல நாளிலே என்க.
(வி-ம்.) அணந்த மூன்றுமுலை
என மாறுக. அணத்தல்-நிமிர்தல். திரு-அழகு. பண்பாகு பெயராகக் கொண்டு தடாதகைப் பிராட்டி
என்க. என்னை! அப்பிராட்டியாரைத் திருமகள் போல்வாள் எனல் சிறப்பின்மையால் என்க.
அருமறை-அன்மொழித்தொகை. நான்முகன் என்க. மதிக்குலம்-திங்கள் மரபு. மதிக்குலம்
வாய்த்த மன்னவனைப் போல ஆகி என விரித்துக் கொள்க.
16-21:
நடுவூர்..............................அடாதே
(இ-ள்) ஊர்நடு நகர்செய்து-மதுரை
மூதூரின் நடுவிடத்தே திருக்கோயில் இயற்றி; அடுபவந் துடைக்கும்-அடியார்களை வருத்துகின்ற
பிறவிப்பிணியைக் கெடுத்தற்குக் காரணமான; அருள் குறிநிறுத்தி-திருவருட்குறியாகிய சிவலிங்கத்தை
அக்கோயிலின்கண் நிறுத்தி; தேவநாயகன்-தேவேந்திரனால்; அருச்சினை செய்த-வழிபாடு
செய்யப்பட்டமையாலே; கூடல்வாழ் இறைவன்-அம்மதுரைமா நகரத்தே எழுந்தருளியிருக்கின்ற
இறைவனுடைய; முருகு அவிழ் இருதாள்-நறுமணங் கமழும் இரண்டாகிய திருவடிகள் பொருந்துதற்
கிடனாக; முண்டகம் மலர்த்தி-தம்முடைய நெஞ்சத் தாமரை மலரை அன்பொளியாலே மலர்வித்து;
உறைகுநர்-சிவயோகத்தே தங்குகின்ற அடியார்கள்; உண்ணும் இன்பம் அறையல் அன்றி-நுகரும்
வீட்டின்பத்தைக் கூறலாமல்லது; மற்று ஒன்றும் அடாது-வேறு எவ்வின்பமும் உவமையாகாது என்க.
அந்நிகழ்ச்சியை நீ நினைத்துப் பார்த்ததுண்டோ என்பதாம்.
(வி-ம்.) நடுவூர்-ஊர்நடு.
நகர்-கோயில். பவம்-பிறப்பு. அருட்குறி-சிவலிங்கம். அருச்சினை-வழிபாடு. தேவநாயகன்-இந்திரங்
முண்டகம்-ஈண்டு நெஞ்சத்தாமரை என்க. முருகு-மணம். தேனுமாம். உறைகுநர் என்றது யோகத்திலிருக்கும்
சிவயோகிகளை. இனி, குழலி! யாம் இருவேமும் இறந்து, பொருந்தி, துய்த்து, எடுத்தும்
உண்டும் இருந்தும் எய்தியும் ஏற்றும் தலைவைத்தும் நுகர்ந்த இன்பத்திற்கு உவமம் இன்று
ஒரோஒவழி உண்டெனின் முண்டகம் மலர்த்தி இறைவன் தாள் உறைகுநர் உண்ணும் இன்பம்
அதற்கு உவமம் ஆகும் என்று அறையலன்றி மற்றொன்றும் அடாதுகாண் என இயைத்துக் கொள்க.
நீ அதனை உள்ளியும் அறிதியோ என்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடும் பயனும் அவை.
|