|
1-2: நண்ணிய..................................அவதரித்தும்
(இ-ள்) பாதி நண்ணிய
பெண்ணினர்க்கு-தன்றிரு மேனியில் ஒரு கூறாகப் பொருந்திய உமாதேவியாரை உடையவர்க்கு;
அமுதம் அடும்-உணவாகிய நஞ்சினை உண்டாக்கும்; மடைப்பள்ளியின் நடு அவதரித்தும்-மடைப்பள்ளியாகிய
திருப்பாற்கடலின் நடுவே பிறந்து வைத்தும் என்க.
(வி-ம்.) பாதி நண்ணிய
பெண்-இடப்பாகத் தமர்ந்த உமை. பெண்ணினர்-பெண்ணையுடையோர். அமுதம்-உணவு. ஈண்டு
நஞ்சு. அடுதல்-சமைத்தல். மடைப்பள்ளி-அடுக்களை. திருப்பாற்கடல் கடையுங்காலத்தே
ஆங்குக் கடைகயிறாகிய பாம்பு உமிழ்ந்த நஞ்சினைச் சிவபெருமான் உண்ணுதலால் அக்கடலைச்
சிவபெருமானுக்கு உணவு சமைக்கும் மடைப்பள்ளி என்றார்.
3-7:
திரு.................................நின்றெனை
(இ-ள்) திருவடிவு எட்டினுள்
ஒருவடிவு ஆகியும்-அன்றியும் அவ்விறைவனுடைய அழகிய எண்வகை வடிவங்களுள் நீ ஒரு வடிவமாகி
இருந்தும்; முக்கணில் அருள்கண் முறைபெற முயங்கியும்-மேலும் அவ்விறைவனுடைய திருக்கண்
மூன்றனுள் நீ அருட்கண் என்று கூறும் முறைமையினைப் பெறுமாறு அவன் திருமுகத்தே பொருந்திக்
கிடந்தும்; படி இது என்னா அடிமுடி கண்டும்-திருமால் முதலிய தேவர்களாலும் இவற்றின் தன்மை
இவை என்று கூறவியலாத அவ்விறைவனுடைய திருவடியையும் திருமுடியையும் நீ கண்டு வைத்தும்;
புண்ணிய நீறு என பொலிகதிர் காற்றியும்-அன்றியும் அவ்விறைவனுடைய அறந்தரும் திருநீறு
என்னும்படி பொலிகின்ற நிலவொளியினை வீசியும்; நின்றனை-புகழொடு நின்றாய் என்க.
(வி-ம்.) எண்வகை
வடிவம் முன்னர்க் கூறப்பட்ட.ன. அவற்றுள் திங்களும் ஒன்றாதல் உணர்க. இறைவனுடைய கண்கள்
மூன்றும் ஞாயிறும் திங்களும் நெருப்பும் என்ப. அவற்றுள் இடக்கண் அன்னையின் கண்ணாகலின்
திங்களாகிய அக்கண்ணை அருட்கண் என்றார். முறை-எண்ணு முறை. அஃதாவது ஞாயிறும் திங்களும்
நெருப்பும் என்பது. படி: உவமை: தன்மை. இறைவனுடைய திருவடிக்கு உவமையாதல், தன்மையாதல்
கூறினார் யாரும் இலர் என்க. திருமாலும் நான்முகனும் இம்முயற்சியிலே தோல்வி யெய்தினர்.
ஆகலின் படி இது என்னா அடிமுடி என்றார். இறைவனுடைய முடியில் திங்கள் இருத்தலின் முடிகண்ட
நீ அடிகண்டிருத்தலும் இயல்பே என்பாள் அடிமுடிகண்டும் என்றாள். இது என்னும் ஒருமையைத்
தனித்தனி கூட்டுக. புண்ணிய நீறு-புண்ணியம் உண்டாக்கும் நீறு என்க. பூச இனியது நீறு
புண்ணியம் ஆவது நீறு என, திருஞான சம்பந்தரும் அருளிச் செய்தல் காண்க. (திருமறை.
2 பரையின் வரலாறு. திருநீற்றுப் பதிகம் 5)
|