|
(வி-ம்.) இது புனல்தரு
புணர்ச்சி கூறுகிறது. குவளை என்று கண் மலர்ந்த எனப் பொருளை உவமையாக்கிக் கூறினும்
கண்போன்று குவளை மலர்ந்த சுனை என்க. புதைய-மூழ்க.
15-17:
செறி....................................அளித்தும்
(இ-ள்) செறிபிறப்பு
இறப்பு என இருவகை திரியும்-பொருந்துகின்ற பிறப்பும் இறப்பும் போலப் போக்கும் வரவும்
என்னும் இரண்டு கூறுபாடாகத் திரியும்; நெடுங்கயிறு ஊசல் பரிந்து கழலும்காலை-நெடிய கயிற்றினையுடைய
ஊசலின்கண் எம்பெருமாட்டி ஏறி ஆடுகின்றுழி; அதன் கயிறு அற்றதனால் அழுதனளாக அப்பொழுது;
முன்னையின் புனைந்து முகமன் அளித்தும்-முன்புபோல அவ்வூசற் கயிற்றினைச் சீர்திருத்திக்
கொடுத்து அவள் மனமகிழும்படி இன்மொழிகள் பற்பல கூறித் தேற்றியும் என்க.
(வி-ம்.) பிறப்பும்
இறப்பும் ஊசல்வருவதற்கும் போதற்கும் உவமை. இருவகை-வருதலும் போதலுமாகிய இரண்டுவகை
என்க. முன்னையில்-முன்புபோல. முகமன்-இன்மொழிகள். கலுழ்வாளைத் தேற்றி என்க. கலுழ்தல்-அழுதல்.
18-19:
தந்த.....................................நடுநாள்
(இ-ள்) தந்தஎம்
குரிசில்-இங்ஙனமாக எம்பெருமாட்டிக்கு உற்றுழி யுதவி உயிர் வழங்கிய எந் தலைவன்;
தனிவந்து எமது கண்கிடைத்து என-எம்பொருட்டுக் கொடுவிலங்குகள் திரியும் இக்கானகத்தே
தமியனாய் வந்து யாங்கள் இழந்திருந்த எம்முடைய கண்கள் மீண்டும் எமக்குக் கிடைத்தாற்போல
எமக்குக் கிடைத்தது; எம்கண் எதிர் நடுநாள்-எங்களுடைய கண்ணாற்கண்டு எதிர் கொள்ளும்
இந்நள்ளிரவிலே என்க.
(வி-ம்.) தந்த, உயிர்
தந்த என்க. குரிசில்-தலைவங் கொடு விலங்குகள் திரியும் இக்காட்டு நெறியில் எம்பொருட்டு
வந்தான் என்பாள் தனிவந்து என்றும், அவன் எம்மைப் பிரிதல் யாங்கள் கண்ணிழத்தலை
ஒக்கும். அவன் வரவு அக்கண்களை யாங்கள் மீண்டும் பெறுதலை ஒக்கும் என்பாள். எம்கண்
கிடைத்தென என்றாள். கிடைத்து என மாறுக. நடுநாள்-நள்ளிரவு.
7:
பெருமதி
(இ-ள்) பெருமதி-பெருமையினையுடைய
திங்களே! என்க.
(வி-ம்.) பெருமதி:
விளி. இஃது இகழ்ச்சிக் குறிப்பு. மதி-திங்கள்.
|