|
மலர்களைப் பரப்பிவைத்து;
இலவு அலர் வாட்டிய செங்கால் பிடித்து-எம்பெருமான் எம்பெருமாட்டியினுடைய இலவம் பூவை
வருந்தச் செய்த சிவந்த காலைப் பிடித்து; களிதூங்கு உளத்தொடும் மெல்லெனச் சேர்த்தி-மகிழ்ச்சிமிக்க
நெஞ்சத்தோடே அவ்வம்மியின்மேல் மெல்ல வைத்து என்க.
(வி-ம்.) இல்லுறை
கல்-அம்மி. இவள் சிற்றடியை யாம் ஒவ்வோம் என இலவமல்ர் வருந்தும் என்பது கருத்து.
ஊற்றின்பத்தால் உளங்களித்து என்றவாறு. அம்மியின்மேல் மலர் பரப்பப்பட்டிருந்தும்
தலைவியின் அடிகள் மென்மையை நினைந்து மெல்லெனச் சேர்த்தி என்றவாறு. என்னை? அனிச்சமு
மன்னத்தின் றூவியு மாத ரடிக்கு நெருஞ்சிப் பழம் (திருக். 1120) என்பவாகலின் என்க.
29-32:
இரண்டு..........................காட்டி
(இ-ள்) தோலோ இரண்டு
பெயர் காத்த கற்பு-அறந்தலை நிற்றலில் தோல்வியுறாத எம்பெருமானும் எம்பெருமாட்டியும்
ஆகிய இருவரும் குறிக்கொண்டு காத்ததனால் வந்த கற்புடைமையை; முகனுற்காணும் கரியோர்போல-எதிர்
எதிர் வைத்து ஒப்பிட்டுக் காணும் சான்றாயினார்போல; இடப்பால் நிறுத்தி-தலைவியின்
இடப்பாகம் தனக்கு வலமாக நிறுத்தி; பக்கம் சூழ வடமீன் காட்டி-சுற்றத்தார் சூழ்ந்து
நிற்ப அருந்ததியை எம்பெருமாட்டிக்குக் காட்டி என்க.
(வி-ம்.) தலைவனும்
தலைவியுமாகிய இருவருள் ஒருவர் பிறழினும் கற்பொழுக்கம் இல்லாமையின் இரண்டு பெயர்காத்த
கற்பு என்றார். சான்றாவார்-சுற்றத்தார். இஃதென் சொல்லிய வாறோவெனின் கற்புடைமைக்குத்
தலைவியையும் அருந்ததியையும் எதிரெதிர் நிறுத்திக் காணும் சான்றாயினார் போலச்
சுற்றத்தார் சூழ்ந்து நின்று காண் என்றவாறு. கரியோர-சான்றாயினோர். வடமீன்-அருந்ததி:
இனி இதுபற்றிப் பழைய உரையாசிரியர் கூறும் விளக்கம் வருமாறு.
எண்ணும்மை
தொக்கது. காத்த கற்பு உண்டவெச்சில் போல நின்றது. தலைவன் கந்தருவ வழக்கம்போலப்
பிரியாது வரைந்தமையானும் தலைவி கந்தருவ வழக்கம்போல் பிரியாது வரைந்தமையானும்
தலைவி பிறர் வரைவுக்கஞ்சி அறத்தொடு நிற்றலானும் இருவருங் காத்ததனால் வந்த கற்பென்றார்.
இது விபரீதவுவமை. உவமையாய் வருவதனைப் பொருளாக்கிப் பொருளை யுவமையாக்குதலிங் களவின்வழி
வந்த கற்புங் களவின்வழி வாராக் கற்புந் தம்மிடத்திற் பொருந்தாக் காணுஞ் சான்றாயினார்போல
வடமீன் காட்டி யெனினுமாம். களவின்வழி வந்த கற்பு கந்தருவர் கற்பு, களவின்வழி வாராக்
கற்பு உலகக் கற்பு. இது உலகக் கற்பன்மையானும் கந்தருவ வழக்க மொத்தமையானும் கரியார்போல
என்றார்.
32-34:
விளக்கு...................அலவும்
(இ-ள்) விளக்கு அணி
எடுத்து குலவாழ்த்து விம்ம-விளக்கு முதலிய மங்கலப் பொருள்களை நிரலாக ஏந்திக் குலமகளிர்
வாழ்த்துகின்ற வாழ்த்தொலி பெருகாநிற்ப:மண அணி
|