பக்கம் எண் :

மூலமும் உரையும்247



     (வி-ம்.) வைங்குவளை செங்கட்கவரி என்புழிச் செய்யுளின்பமுணர்க. கவரி-எருமை. “கரும்பினைக்கவரி முறித்திட” (சிவராத். குபேர. 9) என்புழியும் அஃதப்பொருட்டாதல் அறிக. நா-கன்று. “எருமையும் மரையும் பெற்றமும் நாகே” (மரபி. 63) என்பது தொல்காப்பியம். உழக்குதல்-துவைத்தும் முறித்தும் அழிவுசெய்தல்.

29-30: அமுத..............................பாயும்

     (இ-ள்) அமுத வாய் மொழிச்சியர் நச்சு விழிபோல-அமுதம்போன்ற வாயூறலையும் மொழியினையும் உடைய இள மகளிரின் நச்சுத்தன்மையுடைய விழிகள்போல; நெடுங்குழை கிழிப்பக் கடுங்கயல் பாயும்-நெடிய குழைகள் கிழியும்படி மிக்க கயல்மீன்கள் பாய்தற்குக் காரணமான என்க.

     (வி-ம்.) அமுத வாயினையும் மொழியினையுமுடையோர் என்க. வாய்: ஆகுபெயர். வாயூறல் என்க. நச்சுவிழி-நச்சுத்தன்மை பொருந்திய விழி. குழைகிழிப்ப என்பது சிலேடை. விழிக்குக் குழை காதணிகலனாகவும் கயலுக்குப் பசிய இலையாகவும் பொருள் கொள்க. கடுங்கயல் என்புழி கடி என்னும் உரிச்சொல் ஈறுதிரிந்து விரைவுப் பொருள் உணர்த்தி நின்றது. உழத்தியர் உழுவயலில் மண்டவும், உழவர் கரையேறவும் எருமை கன்றொடு வெருண்டு கரும்புழக்கவும் கயல்பாயும் என்க.

31-32: தண்ணம்..................................பதியே

     (இ-ள்) தண்ணம் பழனம் சூழ்ந்த-குளிர்ந்த கழனிகளால் சூழப்பட்ட; கண் இவர் பெருவளம் கூடல்பதி-காண்போர் கண்கள் மீண்டும் காண்டற்கு அவாவும் பெரிய வளத்தினையுடைய நான்மாடக்கூடலாகிய மதுரைமாநகரம் நுங்களுக்குக் கண்கூடாகத் தோன்றும் ஆதலின் அம்மலை எய்துமளவும் விரைந்து செல்வீராக என்க.

     (வி-ம்.) தோன்றும் என்பது அவாய்நிலையால் வருவித்துக் கூறப்பட்டது. ஆதலின் அம்மலை எய்துமளவும் விரைந்து செல்வீராக என்பது குறிப்பெச்சம். என்னை? அவர்க்கு அப்பாலை நிலம் துன்பமாயிருத்தலின் கண்டோர் அத்துன்பம் தீருதற்கே இது கூறலின் இதுவே அவர் குறிப்பு என்க. ஒருதிறல்! நீயும் முலையாட்டியும் இவ்வரை கடந்திறந்தால் ஒரு தனிப்பெருமான் கன்னியொடு நிலைத்துள்ள கூடற்பதி தோன்றும். ஆதலால் விரைந்து செல்க! என வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.