பக்கம் எண் :

254கல்லாடம்[செய்யுள்28]



     (வி-ம்.) எதிர்சொல்-எதிரொலி. கூயும்-கூவியும். கால்-காற்று. இனி அடி வைத்தற்கியலாத எனினுமாம்.

28-29: நுசுப்பின்.................................கொய்தும்

     (இ-ள்) நுசுப்பின் பகைக்கு நூபுரம் அரற்ற-இடைக்குப் பகையாதல் கருதித் தங் கிங்கிணிகள் புலம்பவும்; பைங்காடு நிரைத்த எண்மலர் கொய்தும்-பசிய பூஞ்சோலையிற் பரவிய தாம்தாம் கருதிய மலர்களைக் கொய்தும் என்க.

     (வி-ம்.) எண்மலர்: வினைத்தொகை. நுசுப்பு-இடை. இடைக்குச் சுமையாகி அதனை வருத்துதலின் நுசுப்பின்பகை எனப்பட்டது. நுசுப்பின் பகைக்கு நூபுரம் அரற்ற என்க. நூபுரம்-சிலம்புமாம். நிரைத்த: பலவறிசொல். சிலம்பரற்றக் கொய்தும் என்றமையால் யாண்டும் சுற்றித்திரிந்து கொய்வார் என்பது பெறப்பட்டது.

30-31: மனத்தொடு...............................துரத்தும்

     (இ-ள்) மனத்தொடு கண்ணும் அடிக்கு அடிகொடுபோம்-புடைப்போருடைய மனத்தையும் கண்களையும் புடைக்குந்தொறும் தம்மோடு கொண்டு செல்லுகின்ற; செம்பொன் செய்த வரிபந்து துரத்தும்-சிவந்த பொன்னாலியற்றிய வரிகலையுடைய பந்துகளைப் புடைத்தும் என்க.

     (வி-ம்.) பந்தாடுவோர் பந்துபுடைக்குங்கால் அதனை நினைந்தும் அது செல்லுமளவும் பார்த்தும் நிற்றல் இயல்பாகலின் மனத்தொடு கண்ணுங் கொடுப்போம் பந்து என்றாள். வரிப்பந்து-வரிந்த பந்துமாம்.

32-34: இனைய.....................உரையே

     (இ-ள்) இனைய பல்நெறி பண்ணை எங்கும் அளவாக் கன்னியர்-இத்தன்மையவாகிய பலவேறு வழிகளானும் ஆடும் விளையாட்டிடங்கள் தோறும் அலவுபடுத்தப்படாத கன்னிமாராகிய தோழியர் உளர்; இவருள் உளம் ஆம் வேட்கையள் இன்னள் என்று உரை-இவர்களுள் நின்னெஞ்சத்திலுண்டாகும் வேட்கைக்குக் காரணமானவள் இத்தன்மையள் என்று எனக்கு உணர்த்துவாயாக என்க.

     (வி-ம்.) பண்ணை-மகளிர் விளையாட்டு; ஈண்டு ஆகுபெயராய் இடங்குறித்து நின்றது. உளர் என்றும் யான் அறிகின்றிலேன் என்றும் அவளை எனக்கு உணர்த்துவாயாக என்றும் வருவித்தொதுக. இனி வேலவ! கொழுஞ்சுடரையுடைய பொதியத்திடத்துத் தினைகாத்தும் சுனைகுடைந்தும், அருவி ஏற்றும், கவணெறிந்தும், நெடுமலைகூயும், மலர்கொய்தும், பந்து துரந்தும் இனைய பன்னெறியானும் விளையாடும் பண்ணையில் அளவிலாக் கன்னியர் உளர். இவருள் நின் வேட்கைக்குக் காரணமானவள் யார்? யான் அறிகின்றிலேன். அவள் இன்னளென்று நீ எனக்கு உரை; என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.