பக்கம் எண் :

மூலமும் உரையும்261



பொருள்-பண்டங்கள். கலம்-மரக்கலம். பெருவளி-சூறைக்காற்று. மலக்குதல்-சுழற்றுதல். செயல் மறுத்தல்-கையாறு கொள்ளல். மறுகி என்பதன் ஈறுகெட்டது. இனி மறுசெயல் எனஇயைத்து மற்றுச்செயல் எனினுமாம். என்உளமும், கிள்ளையும் பந்தும், பூவையும், பாவையும், மானும் ஒருசேர மறுக என இயையும். தெருள்பவர் தாம் ஊரும் கலத்தினை வளிமலக்கச் செயல்மறந்து மறுகினாற்போல மறுகஎனத் தொழிலுவமையாக்குக. முதுக்குறைவு-பேரறிவு. உறுத்துதல்-அறிவுறுத்துதல். அஃதாவது தான் பேரறிவுடையளாதலை எமக்குக் காட்டி என்றவாறு. இதனாற் போந்தபொருள், என் மகள் தனக்கு எம்மினுங் காட்டில் தன் கேள்வனே சிறந்தான் என உணர்ந்து எம்மை நீத்துக் கற்புக் கடம்பூண்டு அவனுடன் பாலையில் சென்றாள் என்றவாறு. இச்செயல் அறத்தொடு புணர்ந்த அவள் அறிவுடைமையைப் புலப்படுத்துதலின் முதுக்குறைவுறுத்தி என்றாள். இதனாலும் ஞாயிறு அவளை வருத்தாமைக்கு ஓர் ஏதுக்காட்டினாள் என்க. அவள் மெல்லியல் புணர்த்துவாள் எரிதெறுங் கொடுஞ்சுரத் திறந்தனள் என்றாள்.

9-11: நதிக்........................கண்டன்

     (இ-ள்) நதிக்கடம் தறுகண் புகர் கொலை மறுத்த கல் இபம் அதனை-யாறுபோல் மதநீர் சொரிதலையும் தறுகண்மையினையும் புள்ளிகலையும் கொலைத்தொழிலையும் நீத்த கல்லால் இயன்ற யானையை, கரும்பு கொளவைத்த ஆலவாய் அமர்ந்த நீலம்நிறை கண்டன்-உயிரியானையைப்போலக் கரும்பு தின்னும்படி செய்தருளிய மதுரையில் எழுந்தருளியுள்ள நீல நிறம் நிறைந்த மிடற்றினையுடைய சிவபெருமான் என்க.

     (வி-ம்.) கடம்-மதநீர். புகர்-புள்ளி. கல்யானை ஆதலின் மதம் தறுகண்மை புகார் கொலை முதலியன இல்லையாயிற்று. கல்லிபம்-கல்லாலியன்ற யானை. கல்லானை கரும்பு கொளவைத்தது, இறைவன் மதுரையில் செய்தருளிய திருவிளையாடலுள் ஒன்று. ஆலவாய்-மதுரை. கண்டன்-மிடற்றினையுடையோன்.

12-19: மறிதிரை............................மூடி

     (இ-ள்) உழுவை உகிர் உழக்கும் ஏந்துகோட்டு உம்பல் உரிவைமூடி-புலி தன் நகத்தால் கிழித்தற்குக் காரணமாகிய உயர்ந்த கோட்டினையுடைய யானையினது தோலைப் போர்த்துக்கொண்டு; ஒளியினை மறைத்து-தன்னுடைய பேரொளியினை மறைத்துக்கொண்டமையால்; தரைபடும் மறுக்கம் தடைந்தனபோல-உலகின்கண் உள்ள உயிர்கள் அப்பேரொளியைப் பொறுக்கமாட்டாமையால் படுகின்ற துன்பங்கள் தடைப்பட்டன ஆதல்போல; துலக்குமலை மறிதிரை பரவை புடைவயிறு குழம்ப கலக்குவது ஒரு நாள்போல-விளக்கமுடைய மலையால் தேவர்களும் அசுரர்களும் புரளுகின்ற அலைகலையுடைய கடலின் வயிற்றிடம் குழம்பும்படி கலக்குவதற்கு இடனான் அந்த ஒருநாளில்