பக்கம் எண் :

260கல்லாடம்[செய்யுள்29]



துன்பந் தொடரா இன்ப மெய்திக்
கூற்றுத்தலை பணிக்கும் ஆற்றல் சான்று
கழிபெருஞ் சிறப்பின் வழிவழிப் பெருகி
நன்றறி புலவர் நாப்பண்
வென்றியொடு விளங்கி மிகுகம்யாம் எனவே”
                      (தொல். பொருள். 458. மேற்கோள்)

எனவரும் பழம்பாடலை ஒப்புக் காண்க. விளக்காய்ச் சிரப்பினைக் கொடுத்தலானும், கண்ணா யெல்லாப் பொருளுந் தெரியப்பண்ணுதலானும், கருவா யெல்லாப் பொருளையுமுண்டாக்குதலானும், சான்றாயவரவர் செய்த நல்வினை தீவினை தவர துண்மையாய் நிற்றலானும், தாமரையாய்க் கண்டோர்க்கு உவகையும் விருப்பமு முண்டாக்குதலானும், வழியாய்க் கதியிற் செலுத்தலானும், அருளும் பொருளுமாயிடுக்கண் தீர்த்தலானும் ‘அளிக்கும்’ என்றார். இது, பலபொருளுருவகம்.

1-8: ஈன்ற............................இறந்தானாக

     (இ-ள்) ஈன்ற என் உளமும்-பெற்று வளர்த்த என் நெஞ்சமும்; மொழிதோன்றப் பயின்ற வளைவாய்க் கிள்ளையும்-தான்மகிழும்படி தன்னுடனே எழுத்துருவம் தோன்ற நன்கு மொழிபேசிய வளைந்த அலகினையுடைய தன்கிளியும்; வரிபுனை பந்தும்-வரிந்து அழகுசெய்த தன்னுடைய பந்தும்; பூவையும்-தான் பேணிவளர்த்த நாகணவாய்ப்புள்ளும்; கோங்கின் பொன் அலர்சூட்டிய பாவையும்-தால் ஓலுறுத்தி முலைகொடுத்துப் பாராட்டிக் கோங்கினது பொன்நிற மலர்களைச் சூட்டிய தனது விளையாட்டுப் பாவையும்; மானும்-தான் பேணி வளர்த்த மான் கன்றும்; தெருள்பவர் ஊரும்-திசையறிந்த மாலுமிகள் தாம் செலுத்துகின்ற; நெடுந்திசை நடக்கும் பொருள் நிறை கலத்தினை-நெடுந்தொலை இயங்கும் பண்டங்கள் நிறைந்த மரக்கலத்தினை; பெருவளி மலக்க-பெரிய சூரைக்காற்றுச் சுழற்றுதலாலே; செயல் மறந்து மறுகி ஆங்கு-அம்மாலுமிகள் கையறவுகொண்டு நெஞ்சம் சுழன்றாற்போல; சேர மறுக-சுழன்று வருந்தும்படி எம்மை நீத்து; முதுக்குறைவு உறுத்தி-தனது பேரறிவுடைமையை எமக்குக் காட்டி; எரி தெறும் கொடுஞ்சுரத்து இறந்தனளாக-தீ சுட்டெரிக்கும் கொடிய பாலையிலே சென்றனள் ஆக என்க.

     (வி-ம்.) ஈன்ற என்பது வயிறுளைந்து ஈன்று வளர்த்த என்பதுபட நின்றது. தோன்ற-எழுத்துருவம் தோன்ற; பொருள்தோன்ற எனினுமாம். கிள்ளை-கிளி, வரிப்புனைந்து-வரியையுடைய புனைந்த பந்து; வரிந்து புனைந்த பந்துஆம். பூவை-நாகணவாய்ப்புள். பாவை-விளையாட்டுப்பாவை. மிகுதிபற்றிப் பந்தும் பாவையும் மறுக என்றாள். தெருள்பவர்-திசை அறிந்த மாலுமிகள். நடத்தல்-இயங்குதல்.