பக்கம் எண் :

286கல்லாடம்[செய்யுள்33]



விட்டமையால் அவ்வானம் வீழ்ந்துவிடாதபடி கால் கொடுத்தாற்போலக் கமுகுகள் வளர்ந்து அவ்வானத்தைத் தீண்டி நின்றன என்பது கருத்து.கந்திகள்-கமுகுகள். நெருக்கு பொழில் என்புழி நெருக்கு: வலித்தல் விகாரம். செம்மகளிர்-செம்மையான கற்பொழுக்கமுடைய மகளிர்.

26-30: கண்................................வல்லோரே

     (இ-ள்) கண் எனும் தெய்வக் காட்சியுள்பட்டோர்-கண்ணாகிய தெய்வத்தினது நோக்கின்கண் அகப்பட்டோர்; நிலை வல்லோர்-தம் நிலையின்கண் நிற்கமாட்டாராய் அந்நோக்கத்தால் கவரப்பட்ட தம் நெஞ்சினை மீட்கும் பொருட்டு; வெண் பொடி பூசி-திருநீற்றைப் பூசிக்கொண்டு; எருக்கம் அணிந்து-எருக்க மலர்மாலையை அணிந்துகொண்டு; என்பு பூண்டு-என்பு மாலையும் அணிந்து; பனைபரி கடவி-பனைமடலால் இயற்றிய குதிரையில் ஊர்ந்து; கிழியினைக் கரத்த தாக்கி-தம்முள்ளங்கவர்ந்த நங்கையின் உருவம் தீட்டப்பட்ட கிழியினையும் பலருங்காணக் கையிற்பிடித்து; அந்நோ அருத்தி-அக்காம நோய்க்குக் காரணமான வேட்கையினையுடைய நெஞ்சினை; மீட்பர்-தம்பலதாக மீட்டுக்கொள்வர்! இஃது உலகியல்பு காண் என்க.

     (வி-ம்.) காட்சி-நோக்கு. நிலைவல்லோர் என்புழி நிலைத்தல் வன்மை இல்லார் என எதிர்மறைப் பொருளாகக் கொள்க. இனி, தம் வயமன்றி மடல் வயத்தராய் நிற்கும் நிலையின்கண் வல்லமையுடையோர் எனக் கோடலுமாம். வெண்பொடி-திருநீறு. எருக்கம்: ஆகுபெயர். பனைபரி-பனைமடலால் இயற்றிய குதிரை. அருத்தி: ஆகுபெயர். நெஞ்சு என்க. இஃது உலகியல்புகாண் என்பது குறிப்பெச்சம். எனவே யானும் அங்ஙனமே மடலேறுவேன் என்று உணர்த்தினுமாம். இனி, தோழீ! உலகின்கண் மகளிர் காட்சியுட்பட்டோர் நிலை வல்லோராயவிடத்து வெண்பொடி பூசி எருக்கம் அணிந்து என்பு பூண்டு கிழியினைக் கரத்ததாக்கிப் பனைபரி கடவித் தம் நெஞ்சினை மீட்பர்காண். ஆதலால்யானும் அது செய்வல் என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.