|
(வி-ம்.)
அலமரல்-சுழற்சி. ஈண்டு அதற்கு காரணமாகிய துன்பத்தைக் குறித்து நின்றது. கொல்: அசை.
இதனால் அன்னப் பறவை இடையறாது ஆரவாரித்தலால் அவ்வாரவாரம் நின்னால் எழுப்பப்பட்டது
என்று கருதி யாங்கள் குறியிடத்தே வந்து ஆங்கு நின்னைக் காணாமல் வறிதே மீள்வேமாயினேம்
என்று தோழி தலைவனுக் குணர்த்தினாள் என்க. வைகறைகாறும் அன்னங்கள் இடையறாது ஆரவாரித்தன
என்றமையால் நின் வரவினை எதிர்பார்த்து யாங்களும் வைகறைகாறும் துயிலாதிருந்தோம்
என்றாளுமாயிற்று. அவை அழுங்குதற்கு அவற்றிற்குற்ற அலமரல் என்னையோ என்னும் வினாவால்
மற்று நீதானும் குறியிடத்தே வாராமைக்கு உனக்குற்ற தடைதான் யாதோ என இறைச்சிப்
பொருள்வகையால் வினவினாளுமாயிற்று.
இனி
இதனை, பொற்கொடி! யாம் சூழுங்காவில் அன்னமும் இனமும் பெடையொடு வெரீஇத் தங்கூட்டில்
வைகறைகாறும் துயில் கொள்ளாது ஆரவாரித்தற்கு அவற்றிற்கெய்திய அலமரல்தான் யாதோ?
யாம் அறிகின்றிலேமே! என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|