பக்கம் எண் :

30கல்லாடம்[செய்யுள்1]



24-7: சங்கு.............................உருத்தே

     (இ-ள்) சங்கு இவைநிற்க பெருமானே! எம்பெருமாட்டியின் இம்மாறுபாடுகள் ஒருபுறமிருக்க; பெருந்தமர்-இவளை ஈன்ற தாயும் தந்தையுமாகிய இருமுதுகுரவர்களும் இம்மாறுபாட்டினைக் கண்டு ஐயுற்று; தமியில்-தமியராயிருந்து; உள்ளம் கறுத்து கண் செவந்து உருத்து-நெஞ்சம் கொதித்துக் கண்கள் சிவந்து வெகுண்டு; இல்லில் செறிக்குஞ் சொல்லுடன் கூறினர்-எம்பெருமாட்டியை இற்செறித்தற்குக் காரணமான மொழிகளோடே பிறவும் பேசலாயினர்; சீறூர் சில்மொழி விள்ளும்-அதுவேயுமன்றி இச்சீறூரில் வாழும் ஏதிலாரும் அவள் திறத்தே சில சொற்களை வெளிப்படுப்பர் என்க.

     (வி-ம்.) துணைமுலை பெருத்தன: நுசுப்புத் தேய்ந்தது; கூந்தல் இருண்டது; கண்கள் கறுத்துச் சிவந்தன என்பன தலைவியின் மெய் வேறு பட்டமைகூறி வரைவு கடாவியபடியாம். தமர் இல்லிற் செறிக்கும் சொல்லுடன் கூறினர் என்றது, தமர் நினைவுரைத்து வரைவு கடாவியபடியாம். சீறூர் சின்மொழி விள்ளும் என்றது. பிறர் வரைவுகூறி வரைவு கடாவியபடியாம். மேலும் அதுவே அலரறிவுறுத்து வரைவு கடாவியதூஉம் ஆதல் உணர்க.

     இனி இதனைச் சிலம்ப! பெருத்தன; தேய்ந்தது; காட்டின; செவந்தன; இவைநிற்க; தமர் இல்லிற் செறிக்குஞ் சொல்லுடன் பேசிக்கொண்டனராதலால்; இனி இற்செறிப்பார்; அதுவேயுமன்றிச் சீறூர் சின்மொழி விள்ளும் என வினைமுடிவு செய்க.

     மெய்ப்பாடும் பயனும் அவை.