|
தம் கூட்டிற் புகுந்து;
அலகுபெடை அணைய-அழகிய அலகினையுடைய தம் பெடைகளைத் தழுவா நிற்பவும் என்க.
(வி-ம்.)
தணத்தல்-பிரிதல். மணத்தல்-கூடுதல். அமுத நீர்-அமுதத் தன்மை; என்றது இன்பத்தை.
அன்றில்-துணைபிரிந்து வாழாத இயல்புடைய ஒருவகைப் பறவை. புல்-ஈண்டுப் பனை. அன்றில்
அலகால் சிறப்புடையன ஆதலால் அலகுபெடை என்றாள். பெடை-பெண்அன்றில்.
11-12:
அந்தணர்.........................மறுப்ப
(இ-ள்)
அந்தணர் அருமறை அருங்கிடை அடங்க-அந்தணர்க்குரிய உணர்தற்கரிய வேதங்கள் பிறர்புகுதற்கரிய
கிடையிடத்தே ஒலியவிந்து அடங்கவும்; முதிர்கனிமூலம் முனிக்கணம் மறுப்ப-முதிர்ந்த
பழங்களையும் கிழங்குகளையும் துறவோர் கூட்டங்கள் உண்ணாது மறுப்பவும் என்க.
(வி-ம்.)
அந்தணர்-பார்ப்பனர். உணர்தற்கரிய மறை என்க. கிடை-வேதமொதும் பள்ளி. இனி வேதியர்
குழாமுமாம். துறவோர் இரவின்கண் உண்ணா நோன்பினையுடையோராகலின் உணவினை மறுப்ப
என்க. மூலம்-கிழங்கு. முனிக்கணம்-துறவோர் கூட்டம்.
13-15:
கலவை.....................விளைப்ப
(இ-ள்)
கலவையும் பூவும் தோள்முடி கமழ-சந்தனக் குழம்பும் மலர் மாலைகளும் தம்முடைய தோளிலும்
முடியிலும் கமழா நிற்ப; விரிவலை நுளையர்-விரிகின்ற வலையினையுடைய பரதவர்; நெய்தல்
ஏந்தி-நெய்தல் யாழினைக் கையில் ஏந்தி; துத்தம் கைக்கிளை அளவையின் விளைப்ப-துத்தமென்னும்பண்ணையும்
கைக்கிளை என்னும் பண்ணையும் இசைநூல் இலக்கணத்திற்கிணங்கத் தோற்றுவியாநிற்பவும்
என்க.
(வி-ம்.)
கலவை-நறுமணப்பொருள் கலந்த சந்தனக் குழம்பு. தோளில் கலவையும் முடியில் பூவும் கமழ
என நிரனிறையாகக் கொள்க. விரிவலை: வினைத்தொகை. நுளையர்-நெய்தனில மாக்கள்.
நெய்தல்: ஆகுபெயர். நெய்தலியாழ் என்க. துத்தம் கைக்கிளை என்பன இசைவகைகள்.
16-17:
நீர்......................மலர
(இ-ள்)
பசுந்தாள் சேகொள் ஆம்பல்-பசிய தண்டினையும் சிவந்த நிறத்தையுமுடைய அரக்காம்ப லரும்புகள்;
நீர் அரமகளிர் செவ்வாய் காட்டி மலர-நீரர மகளிர் என்னும் தெய்வ மகளிரின் சிவந்த
வாய்போலக் ஆட்டி மலராநிற்பவும் என்க.
(வி-ம்.)
ஆம்பல் வாய்போல் மலர என்க. நீரரமகளிர்-நீரில் வாழும் ஒருவகைத் தெய்வமகளிர்.
சே-செந்நிறம். செவ்வாய் காட்டிப்
|