|
மடித்துண்ணற்குக் காரணமான
சுவையறிந்து உண்ணுதற்கு; உதவாது வைத்து எடுக்கும்-உதவாமையால் அங்கங்கே வைத்து வைத்து
எடுத்தற்கிடனாகிய; சாரல் நாடன்-மலைச்சாரலையுடைய நாட்டையுடைய தலைவனது என்க.
(வி-ம்.)
பிடியானையின் கைப்பட்ட ஆமான் கன்றிற்கு அரக்கியின் கைப்பட்ட மானிடக் குழந்தை
உவமை. ஆமான் கன்று யானைக்குண வன்மையின் உண்ணமாட்டாதும் விடமாட்டாதும் கவடு முதலிய
இடங்களில் வைத்து வைத்து எடுக்கும் என்பது கருத்து. இதன்ன்ல் தோழி தலைவன் தலைவியை
விரைந்து மணம் செய்துகொண்டு இல்லறம் செய்யுங் கருத்திலனாய் இருவகைக் குறிகளிடத்தும்
இற்செறிப்பு முதலிய இன்னல் நிலைகளினும் வைத்து வைத்து வருத்துகின்றான் என அவனை இயற்பழிக்கின்றாள்.
இதற்கு யானை தலைவனுக்கும் பிறப்பிடத்தினின்றும் வழிதவறி வந்த ஆமான்கன்று தலைவிக்கும்
உவமையாகக் கொள்க. மானிட மக்கள் அரக்கி கைப்பட்டென என்றது ஏனைய உவமங் இங்ஙனம்
இயற்பழித்துழித் தலைவி அதனைப் பொறாது தோழியின் துடுக்கினை அடக்கத் தலைவனுடைய
நற்பண்புகளை நினைந்து அவன் நல்லன் அருளுடையன் நம்மைக் கைவிடான் விரைந்து வந்து
வரைந்துகொண்டு அளிசெய்வன் எனலும், அங்ஙனம் கூறியவழி அந்நினைவு பற்றுக்கோடாக ஆற்றியிருத்தலும்
இதன்பயன் என நுண்ணிதின் உணர்ந்து கொள்க.
10-12:
அறிவும்..........................நன்றே
(இ-ள்)
அறிவும் பொறையும் பொருள் அறிகல்வியும் ஒழுக்கமும் குலனும்-அறிவுடைமையும், நட்டார்
பிழைபொறுக்கும் பொறையும், பொருளியலினை அறிதற்குக் காரணமாகிய கல்வியுடைமையும்,
அதன் காரியமாகிய நல்லொழுக்கமும் இவற்றிற்கெல்லாம் காரணமாகிய உயர்குடிப் பிறப்பும்;
அழுக்கு அறுதவமும் இனிமையும் பண்பும்-மனமாசு தீர்த்தற்குக் காரணமான தவமுடைமையும், எல்லோர்க்கும்
இனியனாம் தன்மையும், பாடறிந்தொழுகும் பண்பும்; ஈண்டவும் நன்று-பெரிதும் நன்றாயிருந்தனகாண்
என்க.
(வி-ம்.)
அறிவும், பொறையும், பொருளறி கல்வியும், ஒழுக்கமும், குலனும், அழுக்கறு தவமும், இனிமையும்,
பண்பும், ஈண்டவும் நன்று என்றது இகழ்ச்சிக்குறிப்பு. இவை நமக்கு நல்லன அல்ல என இயற்பழித்தபடியாம்.
இங்ஙனம் இயற்பழித்தமைக்குக் காரணம் தலைவியை வெகுள்விப்பது. என்னை! அழுகையில்
அழுந்திக் கிடக்கும் அவள் நெஞ்சை அந்நிலைமாற்றி வெகுள்வித்து அவ்வழிபற்றி அவளை
ஆற்றுவிப்பது தொழியின் கருத்தாகலின் என்க. நன்று: ஒருமைப் பன்மை மயக்கம்.
இனி
இதனைச் சாரல் நாடன் அறிவு முதலியன இளங்கொடி திறத்தில் நல்லனவல்ல என வினைமுடிவு
செய்க. மெய்ப்பாடு: இளிவரல். பயன்: தலைவியை ஆற்றுவித்தல்.
|