பக்கம் எண் :

மூலமும் உரையும்381



தழைகளை; ஒரு நீ விடுத்தனை - ஒப்பற்ற நீ விடுத்தாய்; யான் அவை கொடுத்தனன் - யான் அத்தழையினைக் கொடுபோய் எம்பெருமாட்டிக்குக் கொடுத்தேனாக என்க.

     (வி-ம்.) திருவடிப் பெருந்தேன் பருகுநர் என்றது அடிகளைத் தேனிக்கும் அடியார் என்றவாறு. மெய்யடியார் வினை முதலியவற்றால் வாடாது தழைத்திருத்தல் போல வாடாமல் தழைத்த தழை என்றவாறு. பொதுளுதல் - ஈண்டுத் தளிர்த்து நிரம்புதல். வாடாமலர் வாடாத்தழை என இரண்டனோடும் ஒட்டுக. வாடாத என்னும் பெயரெச்சத்து ஈறுகெட்டு வாடா என நின்றது. நீ கொடுத்தாய் என்பது அவள்பால்பெருங்காதலுடைய நீ கொடுத்தாய் என்பதுபட நின்றது. யான் கொடுத்தனன் என்பது அவள்பால் பேரன்புடைய யான் கொடுத்தேன் என்பதுபட நின்றது. எனவே அத்தழை இவ்வாற்றால் பெரும் சிறப்புடையனவாய் இருந்தன எனப் பின்னர்த் தலைவியின் மகிழ்ச்சிக்கு ஈண்டுக் குறிப்பாக ஏதுக்கூறிய படியாம். விடுத்தல்-உய்த்தல்.

17 - 22: அவ்வழி . . . . . . . . . . நீயாயினவே

     (இ-ள்) அவ்வழி கூறின் - அப்பொழுது நிகழ்ந்தவற்றைச் சொல்லுங்கால்; அத்தழை வந்து - அந்தத் தழைகள் அவள்பால் வந்து; கண்மலர் கவர்ந்தும்- அவனுடைய மலர் போன்ற கண்களால் கவரப்பட்டும்; கைமலர் குவித்தும் - அவளால் தன் மலர் போன்ற கைகளைக் குவித்துத் தொழப்பட்டும்; நெடு உயிர்ப்பு எறிய- பெருமூச்செறியும்படி; முலை முகம் நெருக்கியும் - அவளுடைய முலையிடத்தே ஒற்றிக்கொள்ளப்பட்டும்; ஊடியும் - சிறிது ஓடப்பட்டும்; வணங்கியும் - அங்ஙனம் ஓடியதற்கு இரங்கி மீண்டுந் தொழப்பட்டும்; உவந்து அளி கூறியும் - மனமுவந்து முகமனுரைக்கப்பட்டும்; பொறை அழி காட்டிசியள் ஆகி - இவ்வாறெல்லாம் பொறுமையை யிழந்த தோற்றத்தையுடையவளாய்; நிறை அழிந்தவட்கு - நிறையைக் கைவிட்ட எம்பெருமாட்டிக்கு; நீயே ஆயின - அவட்கு நீயேயாயின என்க.

     (வி-ம்.) மலர்போன்ற கண்களைக் கவர்ந்தும் எனவும் மலர் போன்ற கைகளைக் குவித்தும் எனவும் மாறுக. பொறையழி காட்சியள் என்பதற்கு எய்திய இன்பத்தைப் பொறுக்குந் தன்மையில்லாத தோற்றத்தையுடையள் எனினுமாம். காமநோய் பொறுத்தலில்லாத தோற்றம் எனில் அத்தழை நீயேயாயின என்றது பயனில் கூற்றாதல் உணர்க.

     இதனைக் கானவனாகித் தழும்பணிந்து கணையருள் செய்தோன் மூன்றெரி வாழச் சூருட றுணித்த வேற்குமரன் புணர்ந்து மகிழ் செய்த குன்றம் பொலிந்த கூடற் பெருமான் அடித்தேன் பருகுநர்போல, நீ விடுத்த மலர்த்தழை யான் கொடுத்தன னத்தழை நிறையழிந்தவட்கு நீயேயாயின வென வினைமுடிவு செய்க மெய்ப்படும் பயனும் அவை.