பக்கம் எண் :

406கல்லாடம்[செய்யுள்52]



     (வி-ம்.) குருசில் - தலைவன். நடை - இயக்கம். பரவை - பரப்பு. நாற்கடல் நான்கு திசைகளிலும் உள்ள கடல்கள். வகை நான்கு ஆக என்றது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகைப்படும்படி என்றவாறு. விதி - இலக்கண விதி. பழைய உரையாசிரியர் மனுநூல் விதி என்றது வேண்டா கூறுதல் ஆதல் உணர்க. மேதினி - தநிலம். பொறை - சுமை. குருமணி - குருவிந்தம் என்னும் மணி. தேன் - வண்டு, தலைவனுடைய தோளுக்கு மலை உவமை. மலை உவமையாதற்குப் பொதுத்தன்மை மணி விரித்தலும் மலர் சுமத்தலும் என்க. பகைவரை வென்று நிலைநிறுத்திய திரு என்க. திரு-வெற்றித்திரு சுமைசுமப்போர் தோளிற்றாங்கியும் மார்பிலணைத்தும் சுமத்தல் இயல்பாகலின் நிலச்சுமையை நம்பெருமான் தோள் தரித்தும் அணைத்தும் சுமந்தனன் என்றாள். மனம் பணைத்தல் - நெஞ்சம் ஊக்கங்கோடல். கருத்துறும் - கருத்துக் கொள்வான் போலும். எனவே இப்பொழுது நம்பெருமான் நாடுகாத்தற் பொருட்டு நம்பை் பிரிந்து போவான். இதனை நீ உணர்ந்து கொள் என்றாளாயிற்று.

     இனி இதனைக் கூடல் ஒப்பாகிய வணங்கிடையாய்! நங்குருசில் இதுகாறும் மேதினிப் பொறையைத் தரித்தும் அணைத்தும் தானெனக் கண்டும் செய்ததும் அன்றி இப்பொழுது மனம் பணைத்து நம்நாடு பகைவர்பாற் படாமல் காக்கவும் கருதுவான் போல்கின்றனன் என வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.