பக்கம் எண் :

மூலமும் உரையும்409



1 - 5: நுனிக் . . . . . . . . . . வெப்பம்

     (இ-ள்) நுனிகவின் நிறைந்த திருபெரு வடிவினள் - உணர்வுடையோர் நுனித்துணர்தற்குத் தகுந்த அழகு நிரம்பிய திருமகளினுங் காட்டில் மிக்க வடிவினையுடையோய்! கேள்; உயிர் வைத்து உடலம் உழன்றன போல - உயிரை ஓரிடத்தே வைத்து உடம்பு தனியே திரிந்தாற்போன்று; நெடும்பொருள் ஈட்ட நின்பிரிந்து இறந்து - மிக்க பொருளைத் தேடும்பொருட்டு உன்னை இல்லத்தின்கண் தனித்துறைய வைத்துப் பிரிந்து போய்; கொன்று உணல் அஞ்சா குறியினர்போகும் கடுஞ்சுரம் தந்த- உயிர்களைக் கொன்று உண்ணுதலாகிய தீவினைக்கு அஞ்சாத குணமுடைய தீயோர் செல்லுதற்குரிய இடமாகிய கொடிய பாலைநிலத்திலுள்ள; கல் அதர் வெப்பம்- பரல்களையுடைய வழியில் உண்டான வெப்பமானது என்க.

     (வி-ம்.) நுனிக்கவின் - நுனித்துணர்தற்குரிய அழகு. திரு-திருமகள். வடிவினள்: அண்மை விளி. தலைவிக்கு உயிர் உவமை. தலைவனுக்கு உடல் உவமை. உயிர்வைத்து உடலம் உழன்றனபோல என்பது இல்பொருளுவமை. உடல் நண்ணுடலும் பருவுடலும் எனப் பலவாகலின் உழன்ற எனப் பன்மை வறப்பட்டது. நெடும் பொருள் என்புழி நெடுமை மிகுதி குறித்து நின்றது. இறத்தல் - செல்லல். கொன்று என்றதனால் உயிர்களை என்னும் செயப்படுபொருள் வருவித்துரைக்கப்பட்டது. அஞ்சாத என்னும் பெயரெச்சத்தீறு தொக்கது. கொன்றுண்ணுந் தீவினையாளர் எயினர் முதலியோராய்ப் பிறந்து பாலைநிலத்தே உழல்வர் என்பதுபற்றிக் கொன்றுணல் அஞ்சாக் குறியினர் போகுங் கடுஞ்சுரம் என்றான். சுரம் - பாலை. கல் - பரல்; மலையுமாம். அதர்- வழி.

6 - 9: தேவர் . . . . . . . . . . முன்

     (இ-ள்) தேவர் மருந்தும் தென்தமிழ்ச் சுவையும் என்உயிர் யாவையும் இட்டு அடைத்து எந்தி - அமரர்கள் உண்ணுகின்ற அமிழ்தமும் இனிய செந்தமிழின் சுவையும் என்னுடைய உயிரும் ஆகிய இவையிற்றை யெல்லாம் தமக்குள்ளே பெய்து அடைக்கப்பட்டு இறுமாந்து; குருவியும் குன்றும் குரும்பையும் வேறுத்த - சக்கரவாகப் பறவையையும் மலைகளையும் தெங்கிளங்காயையும் சினந்த; நின் பெருமுலை மூழ்க என் உளத்தினில் தொடாமுன் - நின்னுடைய பெரிய முலைகளில் மூழ்கித் திளைத்தற்கு யான் என் நெஞ்சத்தால் நினைப்பதற்கு முன்பே என்க.

     (வி-ம்.) மருந்து - அமிழ்தம். நினைத்தற்கும் நுகர்தற்கும் இனிய வாதலின் அமிழ்தமும் தமிழ்ச் சுவையும் உவமையாயின. தனக்கின்றியமையாமையின் தன் உயிரையும் இட்டு அடைக்கப்பட்டு என்றான். ஏந்துதல் - இறுமாந்திருத்தல். குருவி என்னும் பொதுப்பெயர் குறிப்பால் ஈண்டுச் சக்கரவாகப் பறவையைக் குறித்து நின்றது.